இஸ்ரோவுக்கு உதவ சென்னை ஐஐடியில் செயற்கைகோள் ஆய்வு மையம்!
சென்னை ஐஐடி-யில் நடைமுறைக்கு தேவையான பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான பாதுகாப்பு, கிரிப்டோகிராபி, குவாண்டம் பாதுகாப்பு, ஐஓடி பாதுகாப்பு ஆகியவற்றில் அதிநவீன தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விதமாக இணையப் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கான மையம் (Centre for Cybersecurity, Trust and Reliability – CyStar) சென்னை ஐஐடி-யில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது.
தற்போதைய டிஜிட்டல் உலகில், இணைய அச்சுறுத்தல்கள் பண ஆதாயத்திற்காக மட்டுமின்றி முக்கிய உள்கட்டமைப்புகளும், திட்டமிட்ட தாக்குதல்களுக்கும் ஆளாகின்றன. இத்தகைய சூழ்நிலையில், தேசத்தின் பாதுகாப்பிற்காக இணையப் பாதுகாப்பு வழிமுறைகளுக்கான செயலில் இறங்குவது அவசியமானதாக கருதப்படுகிறது.
அந்த வகையில், எதிர்காலத்தில் சிக்கலான பாதுகாப்பு சவால்களை சமாளிக்க தேவையான நிபுணத்துவத்துடன் மாணவர்கள், வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை தயார்படுத்தும் நோக்கத்தில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆசிரியர் ஜான் அகஸ்டின் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அடுத்தகட்ட முயற்சியாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியுடன் சென்னை ஐஐடியில் திரவ, வெப்பவியல் சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஆராய்ச்சி மையம் அமைக்க, இஸ்ரோ ரூ.1.84 கோடி நிதியுதவி செய்கிறது. இங்கு ராக்கெட், செயற்கைக் கோள் தொடர்பான வெப்பநிலை மேலாண்மை ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். ராக்கெட், செயற்கைக் கோள் வடிவமைப்பு, பகுப்பாய்வு மற்றும் பல்வேறு உதிரிபாகங்கள் சோதனையின்போது உருவாகும் வெப்பநிலை தொடர்பான சிக்கல்களுக்கு ஐஐடி பேராசிரியர்கள் தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்வார்கள்.
இஸ்ரோவின் செயற்கைக் கோள்கள், ராக்கெட்களில் வெப்பநிலை மேலாண்மை தொடர்பாக எழும் சவால்களை எதிர்கொள்ள இந்த மையம் ஓர் ஆய்வு தளமாக செயல்படும். செயற்கைக் கோள் வெப்பநிலை மேலாண்மை, திட, திரவ எரிபொருட்களில் இயங்கும் ராக்கெட்களில் ஏற்படும் எரிதிறன் பிரச்னை, திரவ எரிபொருள் சேமிப்பு கலனில் ஏற்படும் சவால்கள் தொடர்பான உயர் ஆராய்ச்சி பணிகள் இங்கு மேற்கொள்ளப்படும்.
திரவ, வெப்பவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் இஸ்ரோ விஞ்ஞானிகள், ஐஐடி பேராசிரியர்களின் கூட்டு முயற்சியை இந்த மையம் பெரிதும் ஊக்குவிக்கும் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.