புற்றுநோய் ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி அபாரம்: முன்னரே கண்டறியும் மரபணு தரவு தளம் வெளியீடு!

உலக அளவில் மிக ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய். உலக அளவில் இதன் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, இளம் தலைமுறையினருக்கு அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோரின் முன்னோர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை.
உடலில் பல்வேறு வகையான செல்கள் உள்ளன. அதுவே மனிதனின் இயக்கத்துக்கு ஆணிவேராக உள்ளவை. அவை இயல்பாக செயல்படுவதற்கு நாள்தோறும் பலமுறை வளர்ச்சியடைந்தும், பெருகியும் மாற்றமடைகின்றன. அவ்வாறு பெருக்கமடையும் செல்களின் உயிர் அணுக் கூறு சில காரணங்களால் பாதிக்கப்பட்டு அசாதாரண செல்லாக உருவெடுக்கக் கூடும். அத்தகைய அசாதாரண செல்களே புற்றுநோய் செல் என அழைக்கப்படுகிறது.
உடல் ரீதியாகவோ, சூழலியல் மற்றும் வாழ்வியல் காரணங்களே இந்த நோய்க்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. தற்போது புற்றுநோய் பாதிப்புடன் 14.61 லட்சம் பேர் வாழ்ந்து வருவதாக தேசிய புற்றுநோய் பதிவு திட்டம் கூறுகிறது. கடந்த 2022 முதல் ஆண்டுதோறும் இந்த பாதிப்பு 12.8 சதவீதம் அதிகரித்து வருகிறது.
எனினும், உலகளாவிய மரபணு ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. நம் நாட்டில் புற்றுநோய்க்கான குறிப்பிட்ட காரணங்களை கண்டறிவதற்கான சாதனங்களோ, மருந்துகளோ பட்டியலிடப்படவில்லை. தற்போது, 14 முதல் 15 லட்சம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கான சிகிச்சைகள், வெளிநாட்டு மருத்துவ முறையில் உள்ளன.
இந்த இடைவெளியை போக்கும் வகையில், புற்றுநோய் மரபணு திட்டத்தை சென்னை ஐஐடி கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 480 மார்பக புற்றுநோயாளிகளின் திசு மாதிரிகளில் இருந்து 960 முழு எக்சோம் வரிசைமுறை சேகரிக்கப்பட்டது. மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர், சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய மார்பக புற்றுநோய் மாதிரிகளில் இருந்து மரபணு திரிபுகளின் சுருக்கமும் சேகரிக்கப்பட்டது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட ‘பாரத் புற்றுநோய் மரபணு வரைபட’த்தை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி வெளியிட்டார். புற்றுநோய்களுக்கான மரபணு வரைபடங்களை bcga.iitm.ac.in என்ற தளத்தில் பார்க்கலாம். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் இந்த தளத்தை எளிதில் பயன்படுத்தலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிப்ரவரி 4 ஆம் தேதி (இன்று) உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி புற்றுநோய் ஆராய்ச்சிக்காக புற்றுநோய் மரபணு தரவு தளத்தை வெளியிட்டுப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ” பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களுக்கு பயன்படும். இதன் மூலம் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும்.
மேலும் மரபணு மாற்றங்களால் ஏற்படும் புற்றுநோய்களுக்கு தகுந்தவாறு, மருந்துகள் தயாரிக்க முடியும். எல்லாருக்கும் ஒரே மருந்தாக இல்லாமல், அவரவர் மரபணு மாற்றத்துக்கு ஏற்ப மருந்துகள் கொடுத்து, குணப்படுத்த முடியும். அதிதீவிரமடையும் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளை குறைக்க முடியும்.
இந்த மரபணு பரிசோதனை வாயிலாக, புற்றுநோய் வருவதை முன்கூட்டியே கண்டறிந்தும் தடுக்க முடியும்” என்றார்.
சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள இந்த மரபணு தரவுகள், மருத்துவ துறைக்கும், மருந்துகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.