ஹைபர்லூப்: சென்னை – நெல்லைக்கு 45 நிமிடங்கள் தான்… தமிழகத்தில் ஏற்படப் போகும் மாற்றங்கள்!

ஒரு நாடு அல்லது மாநிலத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் மிக முக்கியமானது எது என்றால், அது போக்குவரத்து தான். அந்த வகையில், இந்தியாவின் எதிர்கால போக்குவரத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப் போகிறது ஹைப்பர் லூப் திட்டம்.
விமானத்தைவிட வேகமாக, நிலத்தில் செல்லும் அதிவேக போக்குவரத்து அமைப்பாக உருவெடுக்க உள்ள ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் குறித்து, பல்வேறு நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ள ஹைப்பர்லூப் தொழில்நுட்பம், முழுக்க முழுக்க சென்னையிலேயே, பெரும்பாலும் உள்நாட்டு தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டே ‘ஐசிஎஃப்’ல் உருவாக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை நிதியுதவியுடன் சென்னை ஐஐடி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், தையூர் டிஸ்கவரி சாட்டிலைட் வளாகத்தில் அமைந்துள்ள ஹைப்பர்லூப் சோதனை வசதியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையி்ட்டார்.

பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “சென்னை ஐஐடி உதவியுடன் உருவாக்கப்படும் இது, ஆசியாவிலேயே மிக நீண்ட ஹைப்பர்லூப் சோதனை அமைப்பு ஆகும். இது 410 மீட்டர் நீளம் கொண்டது. விரைவில் ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கு இந்தியா தயாராகிவிடும். இதுவரை மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் ஹைப்பர்லூப் திட்டத்துக்கு நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் வழங்கி வந்தது. தற்போது இந்த ஹைப்பர்லூப் திட்டத்தின் மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) தொழில்நுட்பம் முழுவதும் சென்னை ஐசிஎஃப்-ல் மேம்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
ஹைபர்லூப் என்றால் என்ன… எப்படி செயல்படுகிறது?
ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் என்பது வெற்றிடமான ஒரு குழாய்க்குள் ரயில் போன்ற வாகனம் மின்னல் வேகத்தில் செல்லக்கூடியது ஆகும். குழாய்க்குள் ரயில் போன்ற வாகனம் இருக்கும். இதில் அமர்ந்து பயணிகள் பயணிப்பார்கள். காந்த அலைகள் மூலம் இந்த ரயில் பயணிக்கும். ஒரே நேரத்தில் 40 பேர் இதில் பயணம் செய்யலாம்.குறைந்த அழுத்தக் குழாய்களில் காந்தத்தின் இழுக்கும் சக்தியைப் பயன்படுத்தி விமானம் போன்ற வேகத்தில் ரயில்களை இயக்கும் தொழில்நுட்பம் கொண்ட இந்த ஹைப்பர் லூப் ரயில் சேவைக்கு டிராக் எதுவும் தேவைப்படாது.
பொதுவாக மக்கள் காரில் பயணம் செய்யும் போது மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் அதிகபட்சமாக செல்ல முடியும். அதுவே ரயிலில் பயணம் செய்யும் போது மணிக்கு 500 கி.மீ., வேகத்தில் செல்லலாம். அதுவே விமானத்தில் பயணம் செய்யும் போது அதிகபட்சமாக 700 முதல் 800 கி.மீ., வேகத்தில் செல்லலாம்.

ஆனால் இந்த வேகத்தை எல்லாம் மிஞ்சும் வகையில் ஹைப்பர் லூப்பில் 1000 கி.மீ., வேகத்தில் பயணம் செய்ய முடியும். 1000 கி.மீ., வேகம் என்பது எந்த ஒரு வாகனத்திலும் சாத்தியமில்லை ஆனால் ஹைப்பர்லூப்பை பயன்படுத்தினால் அது நிச்சயம் சாத்தியம் தான். ஹைப்பர்லூப்பை பொறுத்தவரை ஒரு இடத்தில் நிறுத்துவது என்பது ஒரு கடினமான விஷயம் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர். அதுவே ஹைப்பர் லூப்பை நிறுத்துவதற்கு கொஞ்சம் இடம் தேவைப்படும். உடனடியாக நிறுத்தினால் அது ஆபத்தாகும். அதுவே கொஞ்சம் முன்னதாக நிறுத்தினால் எந்த ஒரு அதிர்வும் மக்களுக்கு வராது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அவ்வாறு தமிழகத்தில் ஹைப்பர்லூப் வழித்தடம் அமைக்கப்பட்டால், தமிழகத்தின் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் குறிப்பிட்ட நிமிடங்களில் சென்று வரலாம்.
தமிழ்நாட்டில் ஹைப்பர்லூப்பின் தேவையும் எதிர்பார்ப்பும்
தமிழ்நாட்டின் முக்கிய சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு ஹைப்பர்லூப் அறிமுகமாகும் பட்சத்தில், அதனால் மிகப்பெரிய பயன் கிடைக்கும். நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தொழில்துறை மேம்பாடு அதிகரித்து வரும் நிலையில், வேகமான போக்குவரத்து முறைக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது. ஹைப்பர்லூப் இதற்கான தீர்வாக அமையலாம்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடிய சில முக்கிய ஹைப்பர்லூப் பாதைகள்
சென்னை – மதுரை – தற்போதைய ரயில் பயணம் சுமார் 7-8 மணி நேரமாகும். ஆனால், ஹைப்பர்லூப் மூலம் இதை 30-40 நிமிடங்களுக்குள் முடிக்கலாம்.
சென்னை – திருநெல்வேலி – தற்போது 10-12 மணி நேரம் ஆகும் பயண நேரம் ஹைப்பர்லூப் மூலம் 45-50 நிமிடங்களுக்கு குறைக்கலாம்.
சென்னை முதல் கோயம்புத்தூர் – தற்போது 6-7 மணி நேரம் ஆகும் ரயில் பயணம், ஹைப்பர்லூப் மூலம் 30-35 நிமிடங்களில் முடிக்கலாம்.
சென்னை -பெங்களூர் – 5-6 மணி நேரமாக உள்ள பயணம் ஹைப்பர்லூப் மூலம் 20-25 நிமிடங்களில் முடிக்கலாம்.

ஹைப்பர்லூப்பின் நன்மைகள்
மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடிய திறனுடன், அதிக தூர பயணங்களை மிக விரைவாக முடிக்கலாம். ரயில், கார்கள், பேருந்துகள் போன்று எரிபொருள் இதற்கு தேவை இல்லை. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை மட்டுமே பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை.
ஹைப்பர்லூப் உட்கட்டமைப்பு வளர்ச்சியால் தமிழகம் முழுவதும் பொறியியல், கட்டுமானத் துறைகள் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகள் முன்னேற்றம் காணும் என்பதால், பொருளாதார உயர்வும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
சாலை மற்றும் ரயில் போக்குவரத்து குறையும் என்பதால், போக்குவரத்து நெரிசல் குறையும். பயணிகள் விரைவாக தங்களது இடங்களுக்குச் சென்றடைய முடியும்.
விரைவான பயணம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும், வணிக வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும்.
சவால்கள் மற்றும் தடைகள்

ஹைப்பர்லூப் அமைப்பதற்கான முதலீடு மிக அதிகம்.இதற்கான அரசாங்க ஒப்புதல் மற்றும் விதிமுறைகள் இன்னும் விரிவாக உருவாகவில்லை.புதிய தொழில்நுட்பமாக இருப்பதால், பயணிகள் பாதுகாப்பு மிகவும் முக்கியமாகிறது.
தமிழ்நாட்டிற்கான எதிர்காலம்
இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஹைப்பர்லூப் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டில், ஹைப்பர்லூப் பயண சேவை மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை தூண்டி, அதனை தொழில்நுட்ப முன்னோடியாக மாற்றும் வல்லமை உள்ளது எனலாம்!