சென்னையில் HP லேப்டாப் ஆலை… 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு!
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் ஆலையில் இருந்து ஆப்பிள் நிறுவனம் சார்பாக ஐபோன் தயாரிக்கப்படுகிறது. மேலும், பல உற்பத்தி ஆலைகள் சென்னை அருகே அமைந்துள்ளன.
இந்த நிலையில், புகழ்பெற்ற ஹெச்.பி. நிறுவனம் சார்பில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க, அந்நிறுவனத்துடன் இந்தியாவின் மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனம் டிக்சனின் துணை நிறுவனமான பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்ததத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்கான புதிய ஆலையை சென்னை, ஓரகடம் தொழிற்சாலை வளாகத்தில் அமைக்கிறது.
ரூ.3380 கோடியில் இந்த ஆலை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக இந்த ஆலை மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் லேப்டாப் உற்பத்தி தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் அஷ்னினி வைஷணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஹெச்.பி நிறுவனத்தின் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எச்.பி நிறுவனம் மற்றும் இந்தியாவின் டிக்சன் நிறுவனத்தின் துணை நிறுவனம் ‘பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ்’ கையெழுத்திட்டன.
மேலும், இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான உற்பத்தி சார்ந்த ஊக்கம் திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது அமைவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாடு முழுவதும் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு உற்பத்தி துறையில் இந்த ஆலை முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.