Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

ஓசூர்: டாடா ‘ஆப்பிள் ஐபோன்’ஆலை விரிவாக்கம்… 20,000 பேருக்கு வேலை!

மிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு 19 நிறுவனங்களுடன் ரூ. 7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு மட்டுமின்றி, உள்நாட்டு தொழிலதிபர்களுடனும் தொடர்ந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில். ரூ. 9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாக்குவார் லேண்ட்வார் கார்கள் உற்பத்தி செய்வதற்கான ஆலை அமைப்பதற்கு கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது, ஓசூரில் ரூ. 3,051 கோடி முதலீட்டில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆலை, மேலும் ரூ.3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆலை 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த தொழிற்சாலையானது 174 ஏக்கராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இப்போது விண்ணப்பித்துள்ளது. தற்போது இந்த தொழிற்சாலையில் தினசரி 92,000 மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தினசரி 2 லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில்தான் ‘ஆப்பிள் ஐபோன்’ உற்பத்தி செய்ய டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், இந்த புதிய ஆலையில் 20,000 பேருக்கு மேல் பணியமர்த்தப்பட உள்ளதாகவும், இதன் காரணமாக இந்த ஆலையில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 40,000 ஆக அதிகரிக்கும் என்றும் டாடா சன்ஸ் நிறுவன தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version