“தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு: மோடி, அமித் ஷாவிடம் தமிழக பாஜக-வினர் இதை கேட்பார்களா..?”

மத்திய அரசின் மும்மொழி கொள்கை விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து அனலைக் கிளப்பி வருகிறது. மும்மொழிக் கொள்கை மூலம் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயலுவதாக திமுக உட்பட தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில், இந்தி திணிப்புக்கு எதிராக கடந்த சில தினங்களாக திமுகவினர், தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்கள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு தொடர்புடைய இடங்களில் காணப்படும் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை கறுப்பு பெயின்ட்டால் அழித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக பாஜக-வினர், “இப்படி செய்வதால் வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் எப்படி ஊர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்வார்கள்?” எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழர்கள் வட மாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அந்த ஊரின் பெயர்களைத் தெரிந்துகொள்கிறார்களோ அப்படி தெரிந்துகொள்ளட்டும்” எனக் காட்டமாக கூறி இருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் இந்தியை ஏன் இன்னமும் எதிர்க்கிறோம் என்று விளக்கம் அளித்து, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ” இந்தியை திமுக ஏன் இன்னமும் எதிர்க்கிறது என்று நம்மை நோக்கிக் கேட்பவர்களுக்கு, உங்களில் ஒருவனான நான் அன்போடு சொல்லக்கூடிய பதில், ‘இன்னமும் நீங்கள் அதைத் திணிப்பதால் தான், நாங்கள் அதை எதிர்க்கிறோம்’ என்பதே.
‘காசி சங்கமம்… கும்பமேளாவில் தமிழ் எங்கே?’
‘ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்து விட்டால் வடமாநில பயணிகள் எப்படி ரயில் நிறுத்தங்களை அடையாளம் காண்பார்கள்?’ என்று இங்கே யுள்ள பாஜக நிர்வாகிகள் சிலர் கேட்கிறார்கள். அவர்களுடைய இந்த உணர்வு நியாயமாக தமிழ் மீது இருந்திருக்க வேண்டும். நம்மைக் கேட்பதற்குப் பதில், பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தித் திணிப்பில் தீவிரமாக இருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரிடம், ‘காசி தமிழ்ச் சங்கமம் என்று நடத்துகிறீர்களே, கும்பமேளா நடக்கிறதே, அதற்கு தமிழ்நாட்டில் இருந்தும் தென் மாநிலங்களில் இருந்தும் உத்தரப்பிரதேசம் செல்லும் பயணிகள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மொழி பெயர்ப்பலகைகளை வைத்திருக்கிறீர்களா? இந்தியாவில் உள்ள மாநில மொழிகளைச் சமமாக மதித்து அறிவிப்புகளைச் செய்கிறீர்களா?’ என்று கேட்டிருக்க வேண்டும்?

இன்றைய தமிழ்நாட்டு பாஜகவினர் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் உயர்த்திப் பிடித்து, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமூக நீதி தத்துவத்தைக் கொண்ட தமிழைப் பின்தள்ள நினைக்கும் எண்ணம் கொண்டவர்கள் அப்போதும் இருந்தார்கள்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை முதலில் நுழைத்து, அதனைத் தொடர்ந்து சமஸ்கிருதத்தையும் திணித்து, தமிழையும் தமிழர் பண்பாட்டையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமிழ்நாடு முழு வீச்சாக இன்றைக்கு எதிர்க்கிறது என்றால், அதற்கான அடித்தளத் தைத் திராவிட இயக்கத் தலைவர்கள் அன்றைக்கே வலுவாகக் கட்டமைத்திருக்கிறார்கள். இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு இன்று உயர்ந்து நிற்கிறது” என மேலும் கூறியுள்ளார்.