“மூன்றாவது மொழி சுமை இல்லாமலேயே தமிழக மாணவர்களுக்குத் தரமான கல்வி!”

இந்தி ஆதிக்கத்திலிருந்து மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் விழித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மூன்றாவது மொழி என்ற சுமையை ஏற்றாமலேயே தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தரமான கல்வியை தனது தலைமையிலான அரசு அளித்து வருகிறது எனத் திமுக-வினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
” திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல – வலிந்து திணிக்கப்படும் மொழிகளை மட்டுமே எதிர்க்கும்என்பதை நடைமுறை எதார்த்தத்துடன் கடைப்பிடித்து வருகிறோம். அண்மைக்காலமாக, ‘இந்தி திவாஸ்’ கடைப்பிடிக்கப்படும் நாளில் மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில மொழிப்பற்றாளர்கள், இந்தி ஆதிக்கத்திலிருந்து வங்காள மொழியை மீட்க வலியுறுத்தி பேரணிகளை நடத்துகிறார்கள்.
மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த கவிஞர்கள், அறிஞர்கள் ஆகியோரின் படங்களுடன் இந்தி ஆதிக்கத்தை அன்றே உணர்ந்து – இன்றும் எதிர்ப்புணர்வு குறையாமல் செயல்பட்டு வரும் திராவிட இயக்கத் தலைவர்களின் படங்களையும் பேரணியில் உயர்த்திப் பிடித்துச் செல்கிறார்கள்.
மராட்டிய மாநிலத்தில் அதன் தலைநகரான மும்பை தொடங்கி பல இடங்களிலும் இந்தி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தங்கள் தாய் மொழியான மராத்தியை மீட்டெடுக்கும் வகையில், அம்மாநிலத்தின் மொழி ஆர்வலர்கள் மட்டுமல்ல, மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தாய்மொழியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, தமிழ்நாடு போட்டுத் தந்த பாதையையே பல மாநிலங்களும் பின்பற்றுகின்றன. இந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காத்து நிற்பது திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கைதான்.
இந்தி பேசும் மாநிலங்களில் என்ன நிலைமை?
இந்தி பேசும் மாநிலங்களில் எத்தனைபேர் மும்மொழிப் பாடத்திட்டத்தில் பயின்று வருகின்றனர்? அவர்கள் படிக்கின்ற மூன்றாவது மொழி எது? இந்தியைத் தவிர இரண்டாவதாக ஒரு மொழியை சரிவரக் கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள் எத்தனை உள்ளன? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான பதிலையும், உண்மையான புள்ளிவிவரங்களையும் அளித்துவிட்டு, தமிழ்நாட்டில் மூன்றாவது மொழித் திணிப்புக்கான நியாயமான காரணத்தை ஒன்றிய பாஜக அரசு சொல்லட்டும்.
மூன்றாவது மொழி இல்லாமலேயே…

மூன்றாவது மொழி என்ற சுமையை ஏற்றாமல் தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தரமான கல்வியை அளித்து வருகிறது திராவிட மாடல் அரசு. கால் நூற்றாண்டுக்கு முன்பே அரசுப் பள்ளிகளில் கணினி வகுப்புகள் தொடங்கப்பட்டன. தற்போது அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு உலகநாடுகளுக்குப் பயணிக்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு அதனைக் கையாள்கிறார்கள். விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்துகிறார்கள். கலை – இலக்கியம் சார்ந்த பங்களிப்பினைச் செய்கிறார்கள். பன்முக ஆற்றல் பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள். அதனால் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்று, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர் பொறுப்புகளைப்பெற்று தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் பெருமைச் சேர்க்கிறார்கள்.
தமிழ்நாட்டு மாணவர்களின் பெருமை மீது பொறாமை கொண்டுதான் பாஜக வஞ்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏறத்தாழ 60 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டின் மாணவர்கள் எந்தளவில் கல்வித்தரத்தில் பிற மாநிலத்தவருக்கு குறைவாக இருக்கிறார்கள்? உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் எந்த மாநிலத்தைவிட பின்தங்கியிருக்கிறார்கள்?
தமிழையும் பிற மாநிலத்தவர்களின் தாய்மொழியையும் மதிக்காமல் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் மொழித் திணிப்பை வலியுறுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக இருக்கிறது.
‘போராட்டங்களை நடத்தவும் தயார்‘

மக்கள் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், மாநில உரிமைக் குரலை நசுக்கிவிட நினைக்கும் பாஜக-வின் நோக்கத்தை முறியடிக்கும் வகையில், மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டாலும் அதையும் தி.மு.கழகம் முன்னெடுக்கும். அதில் அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும்.
நாடாளுமன்றத் தொகுதிக் குறைப்பு – ஆதிக்க மொழித் திணிப்பு எனும் இரண்டு அபாயங்களை ஒருசேர செயல்படுத்தி, மாநில உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான அறவழிப் போராட்டம் எதுவாக இருந்தாலும் அதில் உடன்பிறப்புகளுடன், உங்களில் ஒருவனான நான் முதல் ஆளாக நிற்பேன்” என அதில் மேலும் கூறியுள்ளார்.