புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்… தேர்வு செய்யப்பட்ட பின்னணி என்ன?

தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்டு வந்த ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என மூன்று பேர் கொண்ட குழு கூடியது.
இந்த கூட்டத்தில் மொத்தம் 5 பேரின் பெயர்கள், தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு முன்வைக்கப்பட்டன. அப்போது ராகுல் காந்தி, புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவிலிருந்து, தலைமை நீதிபதியை நீக்கியது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு பின்னர் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்தார். ஆனால், ராகுல் காந்தியின் இந்த கருத்தை பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நிராகரித்துவிட்டனர்.
தனது கோரிக்கை ஏற்கப்படாததைத் தொடர்ந்து ராகுல் காந்தி வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக, சீனியர் என்ற அடிப்படையில் ஞானேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமாரை நியமித்து உத்தரவிட்டார். புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ்குமார் புதன்கிழமை பதவியேற்கிறார். 2029 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானேஷ் குமார் தேர்வு பின்னணி…
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தாண்டு பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், 2026-ல் நடக்கவுள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்கள், 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்துவார்.
தேர்தல் ஆணைய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட முதல் தலைமை தேர்தல் ஆணையர் என்ற பெருமையைக் கொண்டுள்ளார் ஞானேஷ் குமார். இவரது பதவிக்காலம் 2029 ஜனவரி 26 ஆம் தேதி வரை ஆகும். மேலும், ஞானேஷ் குமாருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ள நிலையில், 1989ஆம் ஆண்டு பேட்ச் ஹரியானா பிரிவில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி விவேக் ஜோஷி புதிய தேர்தலை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஞானேஷ் குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய காலத்தில், ஜம்மு – காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டம் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முடிவுகளை செயல்படுத்தும் பொறுப்பில் முக்கிய பங்கி வகித்தார். மேலும், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவை உருவாக்குவதற்கு உதவியாக இருந்தவர்.

அப்போது, உள்துறை அமைச்சகத்தின் (காஷ்மீர் பிரிவு) இணைச் செயலாளராக இருந்தார். பின்னர், உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக இருந்த ஞானேஷ் குமார் உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் தொடர்பான ஆவணங்களையும் கையாண்டுள்ளார்.
ஞானேஷ் குமார் 1988 பேட்ச் கேரளா – கேடரின் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கான்பூரில் உள்ள ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக் முடித்துள்ளார். அதன் பிறகு, இந்தியாவில் உள்ள ஐசிஎஃப்ஏஐ பல்கலைக்கழகத்தில் வணிக நிதி தொடர்பான படிப்பு மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் எச்ஐஐடியில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் தொடர்பான படிப்பையும் பயின்றுள்ளார்.
கேரளா அரசில் எர்ணாகுளத்தின் உதவி ஆட்சியராகவும், அடூர் பகுதியின் துணை ஆட்சியராகவும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுக்கான கேரள மாநில மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், கொச்சி மாநகராட்சியின் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல பதவிகளையும் வகித்துள்ளார். மேலும், கேரளா அரசின் செயலாளராகச் செயல்பட்ட ஞானேஷ் குமார், நிதி வளங்கள், விரைவுத் திட்டங்கள் மற்றும் பொதுப்பணித் துறை போன்ற பல்வேறு துறைகளையும் கையாண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, பதவி விலகும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் செயல்பட்டு வந்த, மூவர் குழுவில் உள்ள இரண்டு ஆணையரில் ஒருவர். மற்றொரு நபர் சுக்பீர் சிங் சந்து.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவராக ஞானேஷ் குமார் அறியப்படுகிறார். கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிவில் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற ஞானேஷ் குமார், அதனைத் தொடர்ந்து மார்ச் 15, 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.