நிலத்தடி நீரை இனி எளிதாக கண்டறியலாம்… வரைபடங்கள் தயார்!
தமிழ்நாட்டில் இன்றளவும் கிராமப்புறங்களில் கிணறு வெட்டுவதற்கோ அல்லது போர்வெல் குழாய் அமைப்பதற்கோ நிலத்தடி நீர் எங்கு உள்ளது உள்ளங்கையில் தேங்காயையோ, குச்சியை வைத்தோ அல்லது எலுமிச்சையை கையில் வைத்து உருட்டுதல் மூலமாகவோ நிலத்துக்கு அடியில் தண்ணீரைத் தேடும் பாரம்பரிய, அறிவியல் அடிப்படை இல்லாத முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
தொலைதூர கிராமப்புறங்களில் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளுக்கு, தங்கள் வயல்களில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களைக் கண்டறிய புவியியலாளர்களை அழைக்க நேரமோ பணமோ இருப்பதில்லை. இதனால், பல விவசாயிகள், தங்கள் வயல்களில் ஆழ்துளை கிணறுகளை அமைக்க, கள ஆய்வாளர்களை அழைத்து வருகின்றனர்.
இவர்கள், தேங்காயையோ, ‘Y’ வடிவ வேப்பங் குச்சி, தண்ணீர் நிரம்பிய இரு பாத்திரம் போன்றவற்றைப் பயன்படுத்தி தண்ணீர் இருக்கும் தடயத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். இவற்றின் வாயிலாக, பூமியின் மேல்மட்டத்தில் உள்ள நீரூற்றுகளை எளிதாக அடையாளம் காண முடியும். ஆனால், ஆழமான இடத்தில் உள்ள நீரை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. இதற்கு நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.
இந்த நிலையில், நிலத்தடி நீரை எளிதாக கண்டுபிடிப்பதற்கான பணிகளை, தமிழக குடிநீர் வடிகால் வாரியம் எளிமையாக்கியுள்ளது. இதற்கென, நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள இடங்களின் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதற்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம், 1.98 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இந்த நிதியில், சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும், நிலத்தடி நீர் புவியியல் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. ஜி.ஐ.எஸ்., எனப்படும் தொலை உணர்வு மற்றும் புவி தகவல் தொழில்நுட்பம் வாயிலாக, வரைபடம் துல்லியமாக தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பேசிய தமிழக குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர், “மாவட்ட வாரியாக நிலத்தடி நீர் இருப்பிடத்தை அறிவதற்கான, ‘அட்லஸ்’ வரைபடத்தை, அண்ணா பல்கலையுடன் இணைந்து, குடிநீர் வாரியம் தயாரித்துள்ளது, நாட்டிலேயே இதுதான் முதல்முறை. இந்த வரைபடம் வாயிலாக பணிகள் எளிமையாக உள்ளன.
குறிப்பிட்ட இடத்திற்கு, ‘எலெக்ட்ரிக்கல் ரெசிஸ்ட்டிவிட்டி மீட்டர்’ எடுத்துச் சென்று ஆய்வு செய்தால், ஒன்றரை மணி நேரத்தில் நிலத்தடி நீர் இருப்பின் ஆழம், மண் மற்றும் பாறை வகைகளை, துல்லியமாக அடையாளம் காண முடியும். நிலத்தடி நீரை இந்த தொழில்நுட்பத்தில் கண்டறிய, அரசு தொடர்பான துறைகளுக்கு, 4,200 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. தனியார் நிலங்களில் நிலத்தடி நீர் கண்டறிய, அரசு அனுமதி வழங்கவில்லை. அனுமதி வழங்கினால், தனியார் தொழிற்சாலைகள், குடியிருப்புகளுக்கு தேவையான நிலத்தடி நீராதாரங்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இது அரசின் பரிசீலனையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.