தினமும் பச்சை மிளகாய் சாப்பிட்டால் என்ன ஆகும்?

பச்சை மிளகாய் நம் உணவில் ஒரு சுவையான சேர்க்கையாகும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கேப்சைசின் (capsaicin) போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பொதுவாக பச்சை மிளகாயை காரத்தை கூட்டுவதற்காக குழம்பிலோ அல்லது பொரியலிலோ நறுக்கி அல்லது அரைத்து சேர்ப்பார்கள். சிலர், காரத்துக்காக தனியாகவும் சாப்பிடுவார்கள்.
இந்த நிலையில், தினமும் பச்சை மிளகாய் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? இதைப் பற்றி உணவியல் நிபுணர்களும் மருத்துவர்களும் என்ன சொல்வது என்ன?
உடலுக்கு என்ன பலன்?
“பச்சை மிளகாயில் உள்ள ‘கேப்சைசின்’ வளர்சிதை மாற்றத்தை (metabolism) தூண்டி, உடல் எடை குறைப்புக்கு உதவலாம். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலை பாதுகாக்கின்றன.
சிறிய அளவு மிளகாய் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். இவை தினமும் ஒரு மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
பக்க விளைவுகள்: எச்சரிக்கை தேவை
ஆனால், அதிகப்படியாக சாப்பிடுவது பிரச்னைகளை ஏற்படுத்தும். ‘கேப்சைசின்’ வயிற்று சவ்வை எரிச்சலடையச் செய்யும். இது நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை, புண்கள் உள்ளவர்களுக்கு நிலைமையை மோசமாக்கும். தினமும் மிளகாய் சாப்பிட்டால், குடல் வலி ஏற்பிகளை தூண்டி, எரிச்சல், வயிற்றுப்போக்கு அல்லது பிடிப்புகளை உருவாக்கலாம். காரமான உணவு வாய் மற்றும் தொண்டையிலும் எரிச்சலை ஏற்படுத்தும்.
யாருக்கு பிரச்னை?
வயிற்றில் புண்கள் அல்லது சென்சிடிவ் வயிறு உள்ளவர்கள், அமிலம் உணவுக்குழாய்க்கு பின்னோக்கி வருவதால் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் தினமும் மிளகாய் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், உடலுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
எப்படி சாப்பிடுவது நல்லது?
பச்சை மிளகாய் நன்மைகளை தரலாம், ஆனால் தினமும் சாப்பிடுவது அனைவருக்கும் பொருந்தாது. உங்கள் உடல் நிலையை புரிந்து, அளவோடு சாப்பிடுவது சிறந்தது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு சிறிய பச்சை மிளகாய் போதும். இளம் பச்சை நிறத்தை தேர்ந்தெடுங்கள், அது குறைவான காரம் கொண்டது. சமச்சீரான உணவுடன் சேர்த்து, அதிக காரத்தை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது” என்று ஒருமித்து கூறுகின்றனர் உணவியல் நிபுணர்களும் மருத்துவர்களும்.
பச்சை மிளகாய் விரும்பிகள் எதற்கும் தங்களது குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நல்லது.