‘சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோர வட்டாரங்களுக்கு 2 மாதிரி வியாபார வளாகங்களை உருவாக்க வேண்டும்’ என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள சம்பவம், வியாபாரிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை மாநகரில் 35 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் மேற்கொள்ளும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துவதறுகு விற்பனைக் குழு ஒன்று மாநகராட்சி தரப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை நேரடியாக பெறவும் மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விற்பனைக் குழுவுக்கான உறுப்பினர் தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
அதேநேரம், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வணிகம் செய்வதற்கு வரையறுக்கப்பட்ட பகுதி மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சியில் கமிஷனர் குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் சிலர் கூறியதாவது:
மாநகராட்சி எல்லைக்குள் வர்த்தகம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி, அனுமதிக்கப்பட் பகுதிகளை அதிகாரிகளிடம் ஆணையர் கேட்டறிந்தார். இதன்பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், மாநகராட்சி எல்லைக்குள் மாதிரி சாலையோர வியாபார பகுதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றவர், ‘ போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கடைகளை அகற்றி, மாற்று இடங்களை வழங்குவதற்குத் தேவையான இடங்கள் தயார்நிலையில் வைக்கப்படும்’ என்றார்.
அடுத்ததாக, சென்னையில் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் தலா இரண்டு இடங்களை தேர்வு செய்து, அங்கு சாலையோர வியாபார வளாகங்களை உருவாக்கும் பணிகளை துவக்க வேண்டும்’ என மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்தப் புதிய நடவடிக்கை, வியாபாரிகளின் எதிர்காலத்துக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமையும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.