‘குட் பேட் அக்லி’ : மிரட்டும் ட்ரெய்லர்… அஜித்துக்கு பிளாக்பஸ்டரா?

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெள்ளிக்கிழமையன்று படக்குழுவால் வெளியிடப்பட்டது. இது அஜித் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘குட் பேட் அக்லி’ படத்தின் ட்ரெய்லர் 2 நிமிடங்கள் 45 வினாடிகளைக் கொண்டுள்ளது. இதில் அஜித்தின் மாஸ் தோற்றமும், ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. ட்ரெய்லரின் தொடக்கத்தில் அஜித் ஒரு புதிரான கதாபாத்திரமாக அறிமுகமாகிறார். அவரது நகைச்சுவை தொனியும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்கு தனி சிறப்பு சேர்க்கின்றன. மேலும், ‘தீனா’, ‘மங்காத்தா’ போன்ற அஜித்தின் முந்தைய படங்களின் சில குறிப்புகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இது ரசிகர்களுக்கு நாஸ்டால்ஜியாவை ஏற்படுத்தியுள்ளது. பழைய பாடலான “ஒத்த ரூபா தாரேன்” ரீமிக்ஸ் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ட்ரெய்லரில் அவரது பின்னணி இசை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்து. முன்னதாக வெளியான டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, அஜித்தின் வசனங்கள் மற்றும் அவரது தோற்றம் “AK வரார் வழிவிடு” என்று ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ட்ரெய்லரை பொறுத்தவரை, இது ஒரு ஆக்ஷன் நகைச்சுவை படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆதிக் ரவிச்சந்திரனின் தனித்துவமான பாணி இதில் தெளிவாக பிரதிபலிக்கிறது. த்ரிஷாவின் கதாபாத்திரம் குறித்து ட்ரெய்லரில் அதிகம் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், மற்ற நடிகர்களின் பங்களிப்பு படத்திற்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் முந்தைய படமான ‘விடாமுயற்சி’ எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில், ‘குட் பேட் அக்லி’ படம் அவரது ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரை விருந்தாக அமையும் என நம்பப்படுகிறது. ஏப்ரல் 10-ல் வெளியாகும் இப்படம் தமிழகத்தில் சுமார் 900 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்களின் உற்சாகமும், ட்ரெய்லரின் தாக்கமும் இப்படத்தை ஒரு பிளாக்பஸ்டர் ஆக மாற்றலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.