Amazing Tamilnadu – Tamil News Updates

குட் பேட் அக்லி முதல் நாள் வசூல்: அஜித் மீண்டும் மாஸ் காட்டினாரா?

ஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஏப்ரல் 10 வியாழன்று திரையரங்குகளில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம், முதல் நாள் வசூலில் பட்டையைக் கிளப்பியுள்ளது.

முதல் நாள் மாஸ் ஓப்பனிங்

முதல் நாளில் இந்திய அளவில் ரூ.28.5 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது. இது விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (ரூ.20.66 கோடி), ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ (ரூ.14.66 கோடி), மற்றும் சூர்யாவின் ‘கங்குவா’ (ரூ.8.49 கோடி) ஆகியவற்றை மிஞ்சியுள்ளது. சென்னையில் 924 காட்சிகளில் 95% இருக்கைகளும், பெங்களூரில் 616 காட்சிகளில் 54% இருக்கைகளும் நிரம்பியதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கைகள், அஜித்தின் ரசிகர் பட்டாளத்தின் வலிமையை மீண்டும் நிரூபிக்கின்றன.

ஆனால், இந்த வெற்றியை அப்படியே கொண்டாட முடியுமா? அஜித்தின் முந்தைய படமான ‘விடாமுயற்சி’, முதல் நாளில் ரூ.26 கோடி வசூலித்தாலும், மொத்தமாக ரூ.80 கோடி மட்டுமே ஈட்டியது. தவறான வெளியீட்டு நேரம் அதன் தோல்விக்கு காரணமாகக் கூறப்பட்டது. ‘குட் பேட் அக்லி’ க்கு இதே நிலைமை ஏற்படாமல் இருக்க, ரசிகர்களின் ஆரவாரத்தைத் தாண்டி, பொதுமக்களின் ஆதரவு தேவை.

மீண்டும் அஜித்தின் மாஸ் இமேஜ்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம், அஜித்தின் 63 ஆவது படமாகும். ‘மார்க் ஆண்டனி’ படத்துக்குப் பிறகு ஆதிக் இயக்கிய இந்த ஆக்‌ஷன்-காமெடி, அஜித்தின் மாஸ் இமேஜை மீட்டெடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், ஒரு முன்னாள் கேங்ஸ்டரின் கதையை மையமாகக் கொண்டது. இளையராஜா, வித்யாசாகர், அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் பழைய இசை பதிவுகளும், அஜித்தின் முந்தைய படங்களின் குறிப்புகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.

‘விடாமுயற்சி’யின் தோல்விக்குப் பிறகு, அஜித் ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்றுள்ளனர். முன்பதிவில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.15 கோடி வசூலித்து, படத்தின் ஆரம்ப வெற்றியை உறுதிப்படுத்துகிறது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. எந்த சிறப்பு காட்சிகளும் இல்லை. ஆனால், இரவு காட்சிகளில் 88.81% இருக்கைகள் நிரம்பியதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வார இறுதியில் இன்னும் பெரிய வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 2025 ஆம் ஆண்டில் இதுவரை பெரிய அளவில் வெற்றி பெற்ற படம், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ (ரூ.102 கோடி). ‘குட் பேட் அக்லி’ இந்த இடத்தைப் பிடிக்குமா என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும். ஆனால், நான்கு நாள் வார இறுதி மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை இப்படத்துக்கு சாதகமாக அமையலாம். இந்த நாட்களில் வசூல் ரூ.30 கோடியைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version