தங்கம் விலை குறையுமா? – காத்திருக்கும் 2 முக்கிய நிகழ்வுகள்!
தீபாவளியையொட்டி கடந்த மாதம் உச்சத்துக்கு சென்ற தங்கம் விலை, நேற்றும் இன்றும் குறைந்துள்ளது. இதனால், இந்த விலை குறைவு நீடிக்குமா அல்லது மீண்டும் உச்சத்துக்கு செல்லுமா எனக் கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த வாரத்தில் நடக்க இருக்கும் இரு முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையிலேயே தங்கம் விலையின் ஏற்ற இறக்கம் அமையும் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை, கடந்த 16 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தைக் கடந்து, அதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தையும் பதிவு செய்தது. அதற்கு பிறகும் விலை குறைந்தபாடில்லை. பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலும், ஓரிரு நாட்கள் லேசான இறக்கத்திலும் காணப்பட்டது. அதன் பின்னர், கடந்த 20 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. இதன் தொடர்ச்சியாக தங்கம் விலை உயருவதும், குறைவதுமான நிலையிலேயே இருந்து வந்தது.
ஆனால், தீபாவளியையொட்டி கடந்த 30 ஆம் தேதி அன்று மீண்டும் உயர்ந்து கிராமுக்கு ரூ.65-ம், பவுனுக்கு ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7, 440-க்கும், ஒரு பவுன் ரூ.59,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் ரூ.59,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.7, 385-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது நாளாக இன்று சென்னையில் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 7,370 என விற்பனையாகிறது. அதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 58,960 என விற்பனையாகி வருகிறது. இதன்படி கடந்த 2 தினங்களில் மட்டும் பவுனுக்கு ரூ. 680 வரை தங்கம் விலை குறைந்துள்ளது.
விலை குறையுமா?
இந்த விலை குறைவு நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள போதிலும், இது நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அடுத்தவாரம் நடக்க உள்ள இரு முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும் என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காத்திருக்கும் 2 நிகழ்வுகள்
அந்த இரு முக்கிய நிகழ்வுகள் என்னவென்றால், நவம்பர் 5 அன்று நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் நவம்பர் 6 அன்று நடைபெற உள்ள அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கொள்கை முடிவு ஆகியவையே ஆகும்.
தற்போது தங்கத்தின் விலையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதற்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார், இஸ்ரேல் நடத்தும் போர் உள்ளிட்ட பல சர்வதேச அரசியல் சூழ்நிலையும், ஃபெடரல் வங்கி, வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பது குறித்து உறுதியாக எதுவும் தெரியாத நிலையுமே காரணம் என சந்தை பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை ட்ரம்ப் வெற்றி பெற்றால் தங்கத்தின் விலை உயரக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று அமெரிக்க ரிசர்வ் வங்கியான ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவும் தங்கத்தின் மீதான விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில், கடந்த தீபாவளியிலிருந்து இந்த தீபாவளி வரை தங்கத்தின் விலை ஏறக்குறைய 32 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.