தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? 6 காரணங்கள்…

தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஒரு சவரன் 59,000 ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 21 ஆம் தேதி சவரன் 60,000 ரூபாயைக் கடந்தது.
இந்த நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தங்கம் விலை 2 முறை உயர்ந்து மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையே, நேற்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,840 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம் கண்டது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,990-க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,920-க்கும் விற்பனையானது.
விலை அதிகரிப்புக்கு 6 காரணங்கள்…
தங்கத்தைப் பொறுத்த வரை அது நமது நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதிலும், பங்குச் சந்தை மற்றும் முதலீட்டு சந்தையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை உயர்வுக்கு சந்தை நிபுணர்கள் சொல்லும் 6 முக்கிய காரணங்கள் இங்கே…
நிச்சயமற்ற பொருளாதார நிலை
பொருளாதார மந்த நிலை அல்லது நிதி நெருக்கடிகள் போன்ற பொருளாதார உறுதியற்ற காலங்களில், முதலீட்டாளர்கள் பெரும்பாலும் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக மாற்றுகிறார்கள். கணிக்க முடியாத சந்தை நிலைமைகளுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பைத் தேடுவதால், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கிறது. இதனால் அதன் விலை உயருகிறது.
உலகளாவிய பதற்றங்கள்
போர்கள், சர்வதேச மோதல்கள் அல்லது அரசியல் உறுதியற்ற தன்மை போன்ற நிகழ்வுகள் சர்வதேச சந்தைகளில் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில், பாரம்பரிய நிதி அமைப்புகள் தடுமாறும்போது தங்கம் அதன் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பதால், அது ஒரு விருப்பமான முதலீடாக மாறி, விலை உயர்வுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
பணவீக்க தடுப்பு
பணவீக்கம் அதிகரிக்கும் போது, ரூபாயின் மதிப்பு குறைந்து, வாங்கும் சக்தி குறைகிறது. இருப்பினும், தங்கம் காலப்போக்கில் அதன் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்கிறது. இது பணவீக்கத்திற்கு எதிராக ஒரு கவர்ச்சிகரமான பாதுகாப்பாக அமைகிறது. முதலீட்டாளர்கள் தங்கள் செல்வத்தைப் பாதுகாக்க தங்கத்தை நோக்கிச் செல்கிறார்கள். இதனால், அதன் விலை மேல் நோக்கித் தள்ளப்படுகின்றன.

குறையும் நாணய மதிப்பு
உள்ளூர் நாணயத்தின் மதிப்பு குறையும் போது, தங்கத்தின் விலை அதிகரிக்கும். நாணய மதிப்பு குறைவதால் தங்கத்தை வாங்குவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி உள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற தங்க இறக்குமதியை நம்பியுள்ள நாடுகளில். இது விலை ஏற்றத்தை அதிகரிக்கிறது.
ரிசர்வ் வங்கி கொள்கைகள்
வட்டி விகிதக் குறைப்பு அல்லது பெரிய அளவிலான பணம் அச்சிடுதல் போன்ற மத்திய வங்கி எனப்படும் ரிசர்வ் வங்கியால் எடுக்கப்படும் முடிவுகளும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தங்கத்தின் மீதான குறைந்த கடன் வட்டி விகிதம், அதை வைத்திருப்பதற்கான வாய்ப்புச் செலவைக் குறைத்து, அதை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகிறது. அதே நேரத்தில், விரிவாக்கக் கொள்கைகள் பெரும்பாலும் பணவீக்கக் கவலைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் தங்கத்திற்கான தேவையை மேலும் அதிகரிக்கச் செய்து விலை உயர்வுக்கு வழி வகுக்கிறது.
உலகளாவிய தேவை
இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் தங்கத்திற்கான தேவையும், விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நாடுகளின் கலாச்சாரங்களில், குறிப்பாக பண்டிகை காலங்கள், திருமணங்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களின் போது தங்கம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது என்பதால், அதன் சந்தை தேவை மேலும் அதிகரிக்கிறது.