மகிழ்ச்சி அளிக்கும் தங்கம் விலை: தொடர்ந்து சரிய காரணம் என்ன?
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக உச்சத்துக்கு சென்ற தங்கத்தின் விலை, நவம்பர் மாத தொடக்கத்திலிருந்தே சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி விலை குறைவுக்கு வித்திட்டது.
மேலும் பண்டிகை சீசன் முடிந்ததால், மக்களிடையே தங்கம் வாங்குவது குறைந்ததும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. அந்த வகையில், கடந்த 11 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 குறைந்து, ரூ.57,760 க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்றும் விலை சரிந்து காணப்பட்டது. சவரனுக்கு ரூ.1,080 அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ, 56,680 ஆகவும், ஒரு கிராம் ரூ.135 குறைந்து, ரூ.7,085 ஆகவும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று ( நவ.13) மீண்டும் சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.56,360க்கும், ஒரு கிராம் 7,045 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,840 குறைந்துள்ளது.
தை மாதம் ( ஜனவரி) வரை திருமண நிகழ்வுகள் மற்றும் சுபகாரியங்கள் அதிக அளவில் நடைபெறும் என்பதால், முன்கூட்டியே தங்க நகை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த விலை சரிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விலை சரிவுக்கு என்ன காரணம்?
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவதற்கு பல்வேறு காரணங்களை சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், அதில் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்கின்றனர்.
மேலும் ‘உக்ரைன் – ரஷ்யா மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்கள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்’ என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார். இதனால், உலகளவில் தொழில்துறை பங்குகள் நல்ல லாபம் ஈட்டித் தரும் என்ற நம்பிக்கையால், முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகள், டாலர், ‘கிரிப்டோ கரன்சி’ போன்றவற்றில், அதிக முதலீடு செய்து வருகிறனர்.
இவ்வாறு முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்திலிருந்து திசை திரும்பியதும் அதன் விலை குறைவுக்கு முக்கிய காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
விலை குறைவு நீடிக்குமா?
அதே சமயம், இந்த விலை குறைவு , தொடர்ந்து நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீடிக்கலாம் என்றாலும், இதே நிலை தொடராது என்கிறார்கள் நிபுணர்கள்.
ஏனெனில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது. வட்டி குறையும் போது தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.