“தான பத்திரத்தை ரத்து செய்யலாம்..!” – மூத்த குடிமக்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கும் தீர்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றம், மூத்த குடிமக்களுக்கு நிம்மதி அளிக்கக்கூடிய ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
பெற்றோர் தங்கள் சொத்தை பிள்ளைகளுக்கு வழங்கிய தான பத்திரத்தை, பிள்ளைகள் பராமரிக்க தவறினால் ரத்து செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. தான பத்திரத்தில் பராமரிப்பு குறித்து வெளிப்படையாக குறிப்பிடாவிட்டாலும், அது ஒரு “மறைமுக நிபந்தனை” என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தான பத்திரம் அல்லது பரிசுப் பத்திரம் (Gift deeds) என்பது அசல் சொத்தின் உரிமையாளர், தனது சொத்தை ஒரு தனிநபருக்கு, அவரது நம்பிக்கைக்கு அல்லது விருப்பத்தின் பேரில் வழங்க அனுமதிக்கும் ஆவணமாகும். இந்த ஆவணத்தை வைத்திருப்பது, பரம்பரை உரிமைகோரல்கள் காரணமாக எழும் சர்ச்சைகளைத் தவிர்க்க பெரிதும் உதவுகிறது.
அந்த வகையில், முதியவர்கள் தங்களது பிள்ளைகள் மீதுள்ள பாசத்தின் காரணமாகவும், எதிர்காலத்தில் நம்மை கவனித்துக்கொள்வார்கள் என்ற அதீத நம்பிக்கையிலும், தங்களது சொத்துகளை அவர்களது பெயரில் எழுதி வைக்கின்றனர். இதில் சிலர், சொத்து கைக்கு வந்த பின்னர் பெற்றோர்களை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். சில நேரங்களில் மகன் அல்லது மகள் இறந்து போனால், மருமகள் அல்லது மருமகன் அந்த சொத்தை அபகரித்துக்கொண்டு அவர்களை ‘அம்போ’ என கைவிட்டுவிடுகின்றனர்.
தீர்ப்பின் பின்னணி
இந்த நிலையில், மேற்கூறிய தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் அமர்வு, “இந்த சட்டத்தின் நோக்கம் மூத்தோரின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது தான். மூத்தோர் தங்கள் சொத்தை பிள்ளைகளுக்கு அன்பு மற்றும் பாசத்தால் வழங்குகின்றனர். இது வெறும் சட்ட ஆவணம் அல்ல; முதுமையில் பராமரிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. இந்த அன்பு, ஒரு மறைமுக நிபந்தனையாகிறது. பராமரிப்பு இல்லையெனில், பிரிவு 23(1)-ன் கீழ் பத்திரத்தை ரத்து செய்யலாம்” என்று தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
வழக்கின் சுருக்கம்
எஸ். நாகலட்சுமி என்ற மூதாட்டி (இறந்துவிட்டார்) தனது சொத்தை மகனுக்கு பரிசாக வழங்கினார். மகன் இறந்த பின், மருமகள் அவரை புறக்கணித்ததாக புகார் எழுந்தது. 87 வயதில் தனிமையில் விடப்பட்ட அவர், “மூத்த குடிமக்கள் சட்டத்தின்” கீழ் பரிசு பத்திரத்தை ரத்து செய்ய கோரினார். வருவாய் கோட்டாட்சியர் (RDO) விசாரணை நடத்தி, மருமகள் பராமரிக்கவில்லை என உறுதிப்படுத்தி, பத்திரத்தை ரத்து செய்தார்.
வருவாய் கோட்டாட்சியரின் இந்த முடிவை எதிர்த்து மருமகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். “பத்திரத்தில் பராமரிப்பு நிபந்தனை இல்லை” என்று வாதிட்டார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த இரு நீதிபதிகள் அமர்வு, “மூத்தோருக்கு பராமரிப்பு என்பது இயல்பான எதிர்பார்ப்பு. இது பத்திரத்தில் மறைமுகமாக உள்ளது,” என்று கூறி, மேல்முறையீட்டையும் நிராகரித்தது. நாகலட்சுமி தனது மூன்று மகள்களை விடுத்து, மகனுக்கு மட்டும் சொத்தை வழங்கியது, பராமரிப்பு எதிர்பார்ப்பையே காட்டுகிறது” எனத் தெரிவித்தனர்.
சட்டத்தின் நோக்கம்
“மறைமுக நிபந்தனை என்றால் பராமரிப்பு தேவையில்லை என்று அர்த்தமல்ல. அன்பும் பாசமும் இதற்கு அடிப்படை. புறக்கணிப்பு நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி பத்திரம் செல்லாது,” என்று நீதிமன்றம் விளக்கி உள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, முதியவர்களுக்கான சட்ட பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, அவர்களது உரிமைகளையும் உறுதிப்படுத்தி உள்ளது.