கஜினி 2: ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன அப்டேட்!

2005-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோகா வரவேற்பை பெற்ற ‘கஜினி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடித்த முதல் பாகம், தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் அமீர்கான் நடிப்பில் 2008-ல் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது, ‘கஜினி 2’ தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்கள், அதன் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் ‘கஜினி 2’ குறித்து பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், “என்னிடம் சில யோசனைகள் உள்ளன. தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இதை உருவாக்க ஆர்வமாக உள்ளார். சரியான நேரத்தில் முடிவு எடுப்போம்” எனத் தெரிவித்தார். மேலும், இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கப்படலாம் என்றும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தெரிவித்தார். இது, சூர்யா மற்றும் அமீர்கான் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சூர்யா அளித்த ஒரு பேட்டியில், “அல்லு அரவிந்த் ‘கஜினி 2’ பற்றி என்னிடம் பேசினார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இரண்டாம் பாகம் எப்போது?
‘கஜினி’ முதல் பாகம், குறுகிய கால ஞாபக மறதியால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் பழிவாங்கும் கதையை உணர்ச்சிகரமாக சொன்னது. இதன் இரண்டாம் பாகம், அதே பாணியில் தொடருமா அல்லது புதிய திருப்பங்களுடன் வருமா என்பது ஆர்வமூட்டும் கேள்வி. தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் (தமிழ்) மற்றும் மது மான்டெனா (இந்தி) இணைந்து, ஒரே நாளில் இரு மொழிகளிலும் வெளியிட திட்டமிடுவதாக தகவல்கள் உள்ளன. சூர்யாவும் அமீர்கானும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

‘சிக்கந்தர்’ படத்தை முடித்த பின் முருகதாஸ் இதை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதல் பாகத்தின் வெற்றியை மீண்டும் பெறுவது சவாலானது. சூர்யா ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் பிசியாக உள்ள நிலையில், இதன் தொடக்கம் தாமதகலாம். இருப்பினும், ரசிகர்கள் “மீண்டும் அந்த மாஸ் கஜினியை பார்க்க ஆவல்” என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.