“நீ நதி போல ஓடிக்கொண்டிரு…” – மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் 132 கோடி முறை இலவச பயணம்!

தமிழ்நாடு அரசு, பெண்களின் நலனுக்காக பல்வேறு புரட்சிகர திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்திய திட்டமாக “மகளிர் விடியல் பயணத்திட்டம்” திகழ்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், அரசு மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்களின் பயண சுதந்திரமும், பொருளாதார சுமையின்றி நகரங்களுக்கு பயணிக்கும் வாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, 132.91 கோடி முறை பெண்கள் இலவசமாக பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இது, இந்த திட்டத்திற்கு கிடைத்த அபரிமிதமான வெற்றியாக கருதப்படுகிறது.
சென்னையில் வசிக்கும் பெண்கள், அன்றாட பயணங்களுக்கு இந்தத் திட்டத்தை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், 3.65 கோடி முறை பெண்கள் நகரப் பேருந்துகளில் பயணித்துள்ளனர். இதில், ஏப்ரல் 28-ஆம் தேதி ஒரே நாளில் 13.59 லட்சம் பயணங்கள் பதிவாகி இருப்பது, இத்திட்டத்தின் பரவலான பலனை எடுத்துக்காட்டுகிறது.
மேலும், மகளிர் விடியல் பயணத்திட்டம், பெண்களின் பயண எண்ணிக்கையில் 23 சதவீத உயர்வை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், தங்கள் பணி, கல்வி, மருத்துவம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த இலவச பயண வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பு மேலும் வலுப்பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது.
இத்திட்டம், பெண்களின் பயணத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் மேம்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு பயணிக்கும் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு இந்தத் திட்டம் பயணச் செலவுகளை குறைத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.
132.91 கோடி பயணங்கள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல; அது பெண்களின் கனவுகளையும், வாய்ப்புகளையும் நோக்கிய பயணத்தின் அடையாளம் என்றே சொல்ல வேண்டும்!