தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் முதன்முறையாக 3 ஆண்டுகளுக்கு ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்த கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த கார் பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தி நகர் அருகே நடைபெற இருந்தது.
ஆனால், அப்போது மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதன் காரணமாக, இந்த கார் பந்தயத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கார் பந்தயத்தை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பந்தய தூரம்
கார் பந்தயத்துக்கான ஓடுதளம், சென்னை, தீவுத்திடலையொட்டிய கொடி மரச்சாலையில் தொடங்கி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
பந்தயம் மாலை 4 30 மணிக்குத் தொடங்கும் மற்றும் சுமார் ஐந்து மணி நேரம் தொடரும். இந்த நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்படும். டிக்கெட்டுகள் ரூ 299/ முதல் இருக்கும். மெரினா கடற்கரையை இலேசாக தொட்டும் தொடாமலும் பத்தொன்பது திருப்பங்கள், பல தொடர் முனைகள் மற்றும் உயரங்கள் என கார் ஓட்டுபவருக்கும் ரசிகர்களுக்கும் த்ரிலிங்கை ஏற்படுத்துவதாக இந்த பந்தய பாதை அமைக்கப்பட்டு இருக்கும்.
ரேசிங் ப்ரோமோஷன் பிரைவேட் லிமிடெட் (RPPL) ஏற்பாடு செய்துள்ள இந்த கார் பந்தயத்துக்கான பிரத்யேக சாலைகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு சுமார் 30 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.தமிழ்நாடு பல தசாப்தங்களாக மோட்டார் விளையாட்டுகளின் மையமாக உள்ளது. இந்தியாவின் முதல் ஃபார்முலா பந்தய ஓட்டுநர் நரேன் கார்த்திகேயன் மற்றும் கருண் சந்தோக் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் தமிழ்நாடு, பல கார் உற்பத்தியாளர்களின் தாயகமாகவும் உள்ளது.
இலவசமாக பார்க்கும் வாய்ப்பு
இந்நிலையில், ஃபார்முலா 4 போட்டிக் குறித்த தலைமைச் செயலத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஃபார்முலா 4 போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த பந்தயத்தை 8000 பேர் வரை நேரில் அமர்ந்து பார்க்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பொதுமக்கள் இலவசமாக போட்டியை கண்டுகளிக்கலாம். சனிக்கிழமை பிற்பகலுக்கு பிறகு, தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்படவுள்ளது.இரவு 10:30 வரை போட்டிகள் நடத்தப்படவுள்ளது. போக்குவரத்திற்கு எந்த வித இடையூறும் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.