முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு நிறுவனம், தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உற்பத்தி ஆலைகளைத் தொடங்கி செயல்பட்டு வந்தன. இதன் மூலம் எராளமானோர் வேலைவாய்ப்புகளைப் பெற்று பயனடைந்து வந்தனர்.
இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட கார்களை சுமார் 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது அந்த நிறுவனம். ஆனால் உற்பத்தியில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஆலைகளையும் ஃபோர்டு நிறுவனம் மூடியது.
குஜராத்தில் செயல்பட்டு வந்த ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலை, டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகரில் செயல்பட்டு வந்த அந்த தொழிற்சாலையும் மூடப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்.
அந்த வகையில், தமிழகத்தில் மூடப்பட்ட ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் திறக்கும் வகையில் அந்நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது X சமூகவலைதளத்தில், “போர்டு நிறுவனத்தை கொண்டு வர அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போர்டு உடனான 30 ஆண்டு கால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை பயன் உள்ளதாக அமைந்தது” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நோக்கியா நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் பேபால் நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மைக்ரோசிப் நிறுவனத்துடன் ரூ.250 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுபோன்று மேலும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிய நிலையில், திருச்சி மற்றும் காஞ்சிபுரத்தில் ரூ.2,666 கோடி முதலீட்டில் 5,365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையிலான மின்னணு உற்பத்தி நிறுவனங்களை அமைக்கும் வகையில், கடந்த 9 ஆம் தேதியன்று ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன் மற்றும் ஆட்டோடெஸ்க் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.