விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை அவசியம் தானா?
ஆதார் அட்டையைப் போல நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டையை வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக விவசாயிகளின் பெயர்களைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாட்டுக்குப் பின்னர் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய வேளாண் துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி, ” வேளாண்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் விவசாயிகளை பதிவு செய்யும் பணியைத் தொடங்க உள்ளோம்.
விவசாயிகள் பெயர்களைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம், பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. இதற்காக முகாம்கள் நடத்தப்படும். அதன்பிறகு, ஆதார் போல், அந்த விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும். அதன்மூலம் அவர்கள் பல்வேறு வேளாண் திட்டங்களைப் பெற முடியும். விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் அட்டை உள்ளிட்ட திட்டங்களை சிக்கலின்றி பெற முடியும். மேலும், அரசின் கொள்கை திட்டமிடலுக்கும் இந்த தரவுகள் பயன்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை கொண்டு வருவதால் என்ன பயன், இது அவசியம் தானா, விவசாயிகள் தரப்பில் என்ன கருதுகிறார்கள்?
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வத்திடம் கேட்டோம்.
” உழவர்களின் உழவு, தேவை, விருப்பம், நிலத்தின் தன்மை, விற்பனை குறித்த விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளன. சில தினங்களுக்கு முன் அரசு 13,999 கோடிக்கு அறிவித்துள்ள திட்டங்கள் விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகளின் தொடர்ச்சி தான். ஏற்கெனவே விவசாயிகளின் விவரங்களைத் தொகுத்து அவற்றை தனியார் மென்பொருள் நிறுவனம் மூலம் பல்வேறு தொகுப்புகளாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த விவரங்களை வேளாண் வணிக நிறுவனங்கள் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கெனவே வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன்கள் அனைத்தும் ஆதார் எண்ணைப் பெற்ற பின்னரே வழங்கப்படுகிறது. வேளாண் துறை வழங்கும் சிறு மானியம் பெறுவதற்கும் ஆதார் எண் அவசியம் என்ற நிலையில் இந்தப் புதிய அட்டை எதற்காக என்ற கேள்வி எழுகிறது.
இந்த அட்டை மூலம். நில உடைமையாளர்களாக உள்ள உழவர்களின் விவரங்கள் மட்டும் தொகுக்கப்படுமா அல்லது குத்தகை விவசாயிகளின் விவரங்களும் தொகுக்கப்படுமா என்ற தகவல் சொல்லப்படவில்லை.
உண்மையில் அரசின் உழவர் கடன் என்பது 30 சதவீத உழவர்களுக்கு கூட சென்று சேருவதில்லை என்கிற நிலை உள்ளது. அதுவும் குறு மற்றும் பெரிய விவசாயிகளுக்கே கிடைக்கிறது. சிறு உழவர்கள், குத்தகை உழவர்கள் தனியாரிடமே கடன் பெறுகிறனர். இப்படியான நிலையில் இந்த அட்டையின் மூலம் எளிதில் கடன் பெற முடியுமா என்பது சந்தேகம் தான்.
கால்நடைகளுக்கு ஆதார் போன்ற அட்டையை கொண்டு வந்தனர். அதன் தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து பதில் இல்லை. இன்னொரு பக்கம் நிலம் சார்ந்த விவரங்களை அரசு டிஜிட்டல் மயமாக்குகிறது. இதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. தற்போது உழவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வும் வருவாயும் எந்தவகையில் கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
2023 ஆம் ஆண்டில் விவசாய உற்பத்தி இரட்டிப்பாகும் என்று மத்திய அரசு கூறியது. அவ்வாறு இரட்டிப்பாகி இருந்தால் கடன் பெறுவோர் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். இன்னமும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்தபடியே செல்கிறது.
வேளாண்மை என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. அந்தவகையில், மத்திய அரசின் இந்த முயற்சியை, முதலில் மாநில அரசுகளிடம் கூறி அவைகளின் கருத்தைக் கேட்டிருக்க வேண்டும். விவசாயிகளின் கருத்தையும் கேட்டறிந்திருக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளாமல் அடையாள அட்டையைக் கொண்டு வருவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்தார் அறச்சலூர் செல்வம்.