இனி, வேலை மாற்றத்தின் போது எளிதில் PF கணக்கை மாற்றலாம்!

நிறுவனங்களில் பணிபுரிவோர் இனி, வேலை மாற்றத்தின் போது தங்களது வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கு பரிமாற்றத்தை எளிமையாக்குவதற்காக, மேம்படுத்தப்பட்ட மென்பொருள் வசதியை பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வசதி, நிதி பரிமாற்றத்தை விரைவுபடுத்தி, உறுப்பினர்கள் அதிகம் சிரமம் இல்லாமல் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கு பரிமாற்றத்தை செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய புதிய வசதி மூலம் இனி, பரிமாற்ற கோரிக்கை முந்தைய (மூல) அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டவுடன், முந்தைய கணக்கு தானாகவே உறுப்பினரின் தற்போதைய ( இலக்கு – destination)அலுவலகத்தில் உள்ள கணக்கிற்கு உடனடியாக மாற்றப்படும். இதுவரை, பி.எஃப். நிதி பரிமாற்றம் இரண்டு அலுவலகங்களின் பங்கேற்புடன் நடைபெற்று வந்தது. மூல அலுவலகத்திலிருந்து நிதி பரிமாற்றப்பட்டு, இலக்கு அலுவலகத்தில் அது பதிவு செய்யப்பட்டது.
தற்போது, இந்த செயல்முறையை மேலும் எளிமையாக்க, இலக்கு அலுவலகத்தில் அனைத்து பரிமாற்ற கோரிக்கைகளுக்கும் அனுமதி பெற வேண்டிய தேவையை EPFO நீக்கியுள்ளது. இதற்காக படிவம் 13 ல் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம், ஆண்டுதோறும் சுமார் 1.25 கோடி உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் எனவும், ரூ.90,000 கோடி மதிப்பிலான பரிமாற்ற செயல்முறையை விரைவுபடுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் EPFO அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய படிவம் 13 வசதி, பி.எஃப். நிதியின் வரி விதிக்கப்படும் மற்றும் வரி விதிக்கப்படாத பகுதிகளை பிரித்து, வரி விதிக்கப்படும் பி.எஃப். வட்டிக்கு துல்லியமான வரி கணக்கீட்டை (TDS) எளிதாக்குகிறது. இந்த ஆண்டு ஜனவரியில், EPFO மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, கணக்கு மாற்றத்தின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதலாளியின் அனுமதி தேவையை நீக்கி, பரிமாற்ற செயல்முறையை மேலும் எளிதாக்கியது.
இதுதவிர, வணிக எளிமைக்காக, ஆதார் இணைப்பு இல்லாமல் முதலாளிகளால் மொத்தமாக UAN (யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்) உருவாக்கும் வசதியையும் EPFO அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய மாற்றங்கள், வேலை மாற்றத்தின் போது ஊழியர்களுக்கு ஏற்படும் தாமதங்களையும் சிக்கல்களையும் குறைத்து, விரைவான மற்றும் திறமையான சேவையை உறுதி செய்யும். தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊழியர்களுக்கு இது குறிப்பிடத்தக்க நன்மையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.