போலி வாக்காளர்கள் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் விளக்கமும்!

வெவ்வேறு மாநிலங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதனால், அவர்கள் போலி வாக்காளர்களாக இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

குறிப்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலிலும், அதற்கு முன்னர் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் இந்த போலி வாக்காளர்கள் பாஜக-வுக்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. தற்போது மேற்குவங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜியும் இதே குற்றச்சாட்டை கூறி உள்ளார்.

ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தரவுகளை தேர்தல் கமிஷன் இணையதளத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு பின்பற்றப்படும் முறை காரணமாக, வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சில வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் ஒதுக்கப்படுவதாக விளக்கம் அளித்தது. மேலும், அவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என்றும், எண்கள் ஒரே மாதிரி இருந்தாலும், புகைப்படம், தொகுதி, வாக்குச்சாவடி விவரங்கள் வெவ்வேறாகவே இருக்கும் என்றும் கூறி இருந்தது.

எனினும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், இந்த பிரச்னைக்கு தீர்வு காண தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வந்தன.

3 மாதத்துக்குள் தீர்வு

இந்த நிலையில் ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் பிரச்னையில் 3 மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்து உள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” 2000 ஆம் ஆண்டில் EPIC முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது தவறான தொடர் பயன்பாடு காரணமாக இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.

இந்தியாவின் வாக்காளர் பட்டியல் உலகெங்கிலும் உள்ள வாக்காளர் பட்டியலை விட மிகப்பெரிய தரவுத்தளமாகும். இது 99 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இந்த ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் விவகாரம் ஏற்கெனவே தேர்தல் கமிஷனால் தானாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தது. வாக்காளர் அடையாள அட்டை எண் எப்படி இருந்தாலும், குறிப்பிட்ட வாக்குச்சாவடியை சேர்ந்த வாக்காளர் ஒருவர், அந்த வாக்குச்சாவடியில் மட்டுமே ஓட்டுப்போட முடியும். வேறு எங்கும் வாக்களிக்க முடியாது.

எனினும் நீண்ட காலமாக இருக்கும் இந்த பிரச்னைக்கு, தொழில்நுட்பக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அடுத்த 3 மாதங்களுக்குள் தீர்வு காணப்படும். இவ்வாறு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கொண்டிருக்கும் வாக்காளர்களுக்கு ஒரு தனித்துவமான தேசிய வாக்காளர் அடையாள அட்டை எண் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் எதிர்கால வாக்காளர்களுக்கும் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு

ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தை நிராகரித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, முதலில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் இல்லை என்று மறுத்த தேர்தல் ஆணையம், தற்போது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், 2000 ஆம் ஆண்டில் EPIC அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதால் இந்தப் பிரச்னை எழுந்ததாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விளக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.

அதேபோன்று காங்கிரஸ் கட்சியும், தேர்தல் ஆணையத்தின் “பலவீனமான மற்றும் போலியான விளக்கத்தை” ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தேர்தல் கமிஷன் உண்மையை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome to knowledge base. How dem take lay pope francis to rest : 250,000 people gather for vatican to say bye bye. current events in israel.