தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் சூழலில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணியும் டெல்லி சென்றுள்ளார். மேலும், டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்ட அதிமுக கட்சி அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்கவே இந்தப் பயணம் என்று கூறப்பட்டாலும், இதன் அரசியல் பின்னணி குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
டெல்லி பயணத்தின் பின்னணி
அதிமுகவின் டெல்லி அலுவலகம், சுமார் 10 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். இன்று நடைபெறும் இந்த அலுவலகத்தின் நேரடித் திறப்பு விழாவில் பங்கேற்கவே எடப்பாடி செல்கிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் பரபரப்பான சூழலில், எதிர்க்கட்சித் தலைவராக தமிழகத்தில் தங்கியிருக்க வேண்டியவர், திடீரென டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. இதனால், இது வெறும் அலுவலகத் திறப்பு விழாவுக்கான பயணம் மட்டுமல்ல; அதையும் தாண்டிய சில அரசியல் கணக்குகளும் இதன் பின்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சமீப நாட்களாக எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியங்களை சுட்டிக்காட்டி வருகின்றன. 2023 செப்டம்பரில் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்த பிறகு, எடப்பாடி “பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை” என்று உறுதியாகக் கூறியிருந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி, “தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். எங்களை ஏற்கும் கட்சிகளுடன் இணைவோம்” என்று கூறியது, பாஜகவுடன் மீண்டும் இணையலாம் என்ற யூகத்தை அதிகரிக்க வைத்துள்ளது. இந்த சூழலில், அவர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பேசிய அதிமுக மூத்த தலைவர் ஒருவர், ” இந்த சந்திப்பு 2026 தேர்தலுக்கான ஆரம்ப பேச்சுவார்த்தையாக இருக்கலாம். ‘திமுகவை எதிர்க்க வேண்டுமென்றால், வாக்குகள் பிரியாமல் இருக்க ஒரு வலுவான கூட்டணி தேவை. பாஜகவுடன் இணைவது அதற்கு உதவலாம்” என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளதாகவும், அதை பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி திட்டமிடலாம் என்றும் கருதப்படுகிறது.
பாஜகவின் திட்டமும் எடப்பாடியின் நோக்கமும்
பாஜக தரப்பில், தமிழகத்தில் தனது பலத்தை அதிகரிக்க அதிமுகவுடன் மீண்டும் இணைய விரும்புவது வெளிப்படையாகவே தெரிகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவும் அதிமுகவும் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியைக் கூட வெல்லவில்லை. வாக்கு பிரிந்து, இரு கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் எடப்பாடி இடையே முன்பு மோதல் இருந்தாலும், தற்போது பாஜக தேசிய தலைமை இதை சரிசெய்ய முயல்வதாக தெரிகிறது.
இந்த நிலையில், “அமித் ஷாவுடனான சந்திப்பின் போது, கூட்டணி குறித்து மட்டுமல்லாது, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு, திட்டங்கள் குறித்தும் பேசப்படலாம். இந்த சந்திப்பைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீடோ அல்லது திட்டங்களோ அறிவிக்கப்பட்டால், அது பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே 2026 தேர்தல் பிரசாரத்துக்கு கைகொடுப்பதோடு, பாஜக உடனான கூட்டணியை நியாயப்படுத்தவும் எடப்பாடிக்கு உதவும்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
எதிர்ப்பும் விமர்சனமும்
இதனிடையே எடப்பாடியின் இந்த டெல்லி பயணம் தமிழகத்தில் இப்போதே எதிர்ப்பையும் விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “எடப்பாடி டெல்லி சென்று யாரை சந்தித்தாலும், தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை வலியுறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். சமூக ஊடகங்களில், “பாஜகவின் அடிமையாக எடப்பாடி மாறுகிறார்” என்று திமுக ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேநேரம், “இது திமுகவை எதிர்க்க ஒரு தந்திரமாக இருக்கலாம்” என்று அதிமுக ஆதரவாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
எது எப்படி இருந்தாலும், எடப்பாடியின் டெல்லி பயணம், 2026 தேர்தலுக்கான அரசியல் உத்தியை வகுப்பதற்கான முயற்சியாகவே தெரிகிறது. அமித் ஷாவுடனான சந்திப்பு, பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தினால், அது தமிழக அரசியல் களத்தில் திமுக-வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். “இரு கட்சிகளும் இணைந்தால், திமுகவுக்கு எதிராக 40-45% வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க முடியும்” என்று பாஜக கூட்டணியை விரும்பும் அதிமுக தலைவர்கள் கூறுகின்றனர்.
எது நடந்தாலும் 2026 தேர்தல் முடிவு, அதற்கான விடையைச் சொல்லிவிடும்!