இதுநாள் வரை பூமியின் இரட்டை சகோதரியாகக் கருதப்படும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்க ஏதுவான சூழல் நிலவுகிறதா, அங்கு தண்ணீர் உள்ளதா என்ற ரீதியில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த நிலையில், ஒரு பெரிய ஏரியே இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆனாலும், செவ்வாய் கிரகத்தின் மொத்த சுற்றுச்சூழலின் தன்மையை முழுமையாக ஆய்வு செய்து பார்த்தால், வெறும் தண்ணீர் மட்டும் இருந்துவிட்டால் மட்டுமே அங்கு மனித வாழ்க்கை சாத்தியப்படாது. செவ்வாய் கிரகம் மிகவும் அதிகமான குளிர்ச்சி மற்றும் கதிர்வீச்சையும் கொண்டது என்றும், எனவே இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் தேவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மனிதர்கள் வசிப்பதற்கு பூமியை தவிர ஏற்ற வேறு கிரகம் உள்ளதாக என விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசா’, இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அது குறித்த புதிய கண்டுபிடிப்புகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
பூமியைப் போன்ற புதிய கிரகம்
அந்த வகையில், தற்போது பூமியைப் போலவே மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையிலான மேலும் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகவும், பூமியிலிருந்து சுமார் 4,000 ஒளி ஆண்டு தூரத்தில் இந்த கிரகம் அமைந்துள்ளதாகவும், பூமியின் எடையை இது ஒத்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தை கண்டறிந்துள்ளனர். அதுதொடர்பான தகவல்கள், நேச்சர் அஸ்ட்ரானமி என்ற இதழில் வெளியாகி உள்ளது. சூரியனைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அதேபோல், சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ளநட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்கள் அல்லது வெளிப்புற கோள்கள் (எக்ஸோபிளானட்ஸ்) என்றழைக்கப்பட்டு வருகின்றன.
‘கெக்’ தொலைநோக்கி
அந்த வகையில், ஹவாயிலுள்ள ‘கெக்’ தொலைநோக்கி மூலம் இந்த கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகத்துக்கு ‘கேஎம்டி-2020-பிஎல்ஜி-0414’ என்று பெயர் வைத்துள்ளனர். சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தை போல 2 மடங்கு தூரத்தில் இந்த கிரகம் அமைந்துள்ளது.
பூமியின் ஆயுள் இன்னும் எவ்வளவு ஆண்டுகள்?
தற்போதைய நிலையில், ஒன்று முதல் எட்டு பில்லியன் ஆண்டுகள் வரை பூமியில் மனிதனால் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர் ஒரு பில்லியன் ஆண்டே தாக்குப்பிடிக்க முடியும் என்று கூறுகின்றனர்.
ஆனாலும், அதிகரிக்கும் பருவநிலை மாறுபாடு, புவி வெப்பமடைதல், மாசு போன்ற பிரச்னைகளால் மழை, வெயில், பனி போன்ற சீதோஷ்ண நிலை சுழற்சி, ஒரே சீராக இல்லாமல் போய்விட்டது. பருவம் தவறிய மழை, மழை காலத்தில் கோடை போன்ற வெப்பம் என இயற்கையின் போக்கு, ஒரு பில்லியன் ஆண்டுகளுக்காவது பூமியை விட்டு வைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இத்தகைய சூழலில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பூமியைப் போன்றகிரகம் மனிதகுலத்தின் உயிர்வாழ்வுக்கான புதிய வாசலாக இருக்கலாம் என்பதும், இந்த புதிய கிரகத்தில் மனிதகுலம் எதிர்காலத்தில் குடியேறும் நிலை வரலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.