பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘டிராகன்’ கடந்த 21 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தில் அனுபமா, கயாடு லோகர், இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், யூடியூப் பிரபலங்களான வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘லவ் டுடே’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் இது இரண்டாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே காணப்பட்டது.
இந்த நிலையில், கல்லூரியில் ஏகப்பட்ட அரியர்ஸ்களுடன் படிப்பது தான் ‘கெத்து’ என்ற ரீதியில் படிக்கும் மாணவன் கேரக்டரில் பிரதீப் ரங்கநாதனின் அட்டகாசமான நடிப்பும், கல்வி எவ்வளவு முக்கியம், அதுவும் நேர்மையாக படித்து பாஸ் ஆவது எவ்வளவு அவசியம் என்பது குறித்து படம் பேசும் மையக்கருவும், காட்சிகளும் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்துவிட்டது. கூடவே கெத்தாக சுற்றித் திரியும் இளைஞர் வாழ்க்கையின் காதல், பிரேக் அப், வேலை, குடும்பம் பற்றியும் படம் பேசுவதால், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கூட்டமும், இளைஞர்களின் கூட்டமும் இப்படத்துக்கு அதிகரித்து காணப்படுகிறது.
கூடவே படம் குறித்த பாசிட்டிவான விமர்சனமும் இதர சினிமா ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு இழுத்து வருவதால், இப்படம் பாக்ஸ் ஆபீசில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றே நாளில் அசத்தல் வசூல்

உலகளவில் 3 நாட்களில் ரூ. 50.22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் ரு. 24.9 கோடி, ஆந்திரா/தெலங்கானா ரூ. 6.25 கோடி, கேரளா/கர்நாடகா/ வட இந்தியா ரூ. 4.37 கோடி, வெளிநாடுகளில் ரூ. 14.7 கோடி வசூலாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் முதல் நாளில் ரூ. 5.8 கோடி, இரண்டாவது நாளில் ரூ. 8.7 கோடி, மூன்றாவது நாளில் ரூ. 10.4 கோடி வசூலித்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாஸ் ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பட்ஜெட் 37 கோடி எனச் சொல்லப்படும் நிலையில், இப்படம் ரூ. 100 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு
இதனிடையே தனது படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தனது பெற்றோர் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “இவர்கள்தான் என் பெற்றோர்.
மாரிமுத்து என்கிற தனபால், எங்கபோனாலும் ஜோல்னா பையோடதான் போவார். என் அம்மா சித்ரா.
12 ஆம் வகுப்புக்குப் பிறகு நான் டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் நான் ஒரு மோசமான ஆங்கில மாணவனானேன். பிறகுதான் நான் செய்த தவறுகளை உணர்ந்தேன். ‘டிராகன்’படம் நான் அவர்களுக்குச் சொல்லும் மன்னிப்பு” என்று தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.