டிரம்பின் 27% சுங்கவரி: இந்தியாவுக்கு எந்த துறைகளில் பாதிப்பு… வாய்ப்புகள் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27% பரஸ்பர சுங்கவரியை அறிவித்துள்ளார்.
இந்த சுங்கவரியால் இந்திய ஏற்றுமதி எவ்வாறு பாதிக்கப்படும், எந்தெந்த துறைகள் அதிகம் பாதிக்கப்படும், இதை எதிர்கொள்ள இந்தியா தரப்பில் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறித்து ஓர் அலசல் இங்கே…
இந்திய ஏற்றுமதிக்கு ஏற்படும் தாக்கம்
அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. 2024-ல் இந்தியாவின் பொருள் ஏற்றுமதி 74 பில்லியன் டாலராக இருந்தது. டிரம்பின் 26% சுங்கவரி, இந்திய பொருட்களின் விலையை அமெரிக்க சந்தையில் உயர்த்தி, அவற்றின் போட்டித்தன்மையை குறைக்கும். இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு அதிக சுங்கவரி (எ.கா., ஆப்பிளுக்கு 50%, அரிசிக்கு 80%) விதிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். அதேசமயம் அமெரிக்கா இறக்குமதிகளுக்கு குறைந்த வரியை (எ.கா., பயணிகள் வாகனங்களுக்கு 2.5%) மட்டுமே விதிக்கிறது என்றும், இந்த ஏற்றத்தாழ்வை சரிசெய்யும் முயற்சியாகவே இந்த பரஸ்பர சுங்கவரி விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு சவாலாக அமையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிகம் பாதிக்கப்படும் துறைகள்
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் மின்னணு பொருட்கள் (14 பில்லியன் டாலர்) மற்றும் ரத்தினங்கள் மற்றும் நகைகள் (9 பில்லியன் டாலர்) ஆகியவை இந்த சுங்கவரியால் மிகவும் பாதிக்கப்படும் துறைகளாக உள்ளன. முன்பு, மின்னணு பொருட்களுக்கு 0.41% மற்றும் நகைகளுக்கு 2.12% மட்டுமே சுங்கவரியாக இருந்த நிலையில், 26% வரி இவற்றின் விலையை கணிசமாக உயர்த்தும். இதனால், அமெரிக்க நுகர்வோர் மலிவான மாற்று வழிகளை தேடலாம், இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சந்தை பங்கை இழக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.

மருந்து பொருட்களுக்கு விலக்கு
மறுபுறம், மருந்து பொருட்கள் (9 பில்லியன் டாலர்) மற்றும் எரிசக்தி பொருட்கள் இந்த சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன, இது இந்திய மருந்து துறைக்கு நிம்மதியை அளிக்கிறது. ஆட்டோ பாகங்கள் மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 25% சுங்கவரி தொடர்ந்தாலும், 26% பரஸ்பர வரி பொருந்தாது. ஆனால், பிற துறைகளான ஜவுளி, பின்னலாடை மற்றும் இரும்பு-எஃகு ஆகியவையும் பாதிக்கப்படலாம் என்று அரசு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டு
இதனிடையே இந்தியாவின் ரசாயனம், தொலைத்தொடர்பு மற்றும் மருத்துவ சாதனங்கள் துறைகளில் “ தேவையற்ற சோதனை மற்றும் சான்றிதழ் தேவைகளை” விதிப்பதாக வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது. இவை அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் பொருட்களை விற்பதை சிரமமாக்குவதாகவும், இத்தடைகள் நீக்கப்பட்டால் அமெரிக்க ஏற்றுமதி ஆண்டுக்கு 5.3 பில்லியன் டாலர்களால் உயரும் என்றும் அது கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்த விமர்சனம், இந்தியாவுக்கு அதன் பாதுகாப்பு வர்த்தகக் கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவுக்கான வாய்ப்பு
டிரம்பின் பரஸ்பர சுங்கவரி திட்டத்தில், சீனாவிற்கு 34%, வியட்நாமிற்கு 46%, பங்களாதேஷிற்கு 37%, தாய்லாந்திற்கு 36%, தைவானிற்கு 32%, மலேசியாவிற்கு 24%, தென் கொரியாவிற்கு 25% மற்றும் ஜப்பானிற்கு 24% சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 26% வரி, வியட்நாம் மற்றும் சீனாவுடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், இந்தியாவைப் பொறுத்தவரை அது இன்னும் கணிசமான சுமையாகவே உள்ளது. ஆனால், சீனா மற்றும் வியட்நாமிற்கு விதிக்கப்பட்ட உயர் வரிகள், இந்தியாவிற்கு ஜவுளி, ஆடை மற்றும் காலணி துறைகளில் சந்தை பங்கை பெறுவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கலாம் என்று சந்தை பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் அலுவலகம் ஆலோசனை

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தில் BIMSTEC உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் சூழலில், பிரதமர் அலுவலகத்தில் இன்று இது குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா தலைமையில், வணிக அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், இந்தியாவின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அப்போது இந்த சுங்கவரியின் தாக்கத்தை குறைக்க அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி மற்றும் சந்தை விரிவாக்கத்துடன், இந்தியா இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது வரும் நாட்களில் தெரியவரும்!