பவள விழா கொண்டாட்டத்துக்கு தயாராகும் திமுக!

திமுக சார்பில், செப்.15ம் தேதி அண்ணா பிறந்த தினம், 17ம் தேதி பெரியார் பிறந்த தினம் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக செப்.17 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே, நாளை செப்.17-ம் தேதி திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. பவளவிழாவையொட்டி திமுக கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் திமுகவிற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் திமுக கொடி ஏற்றப்பட்டு, வீதிகள்தோறும், வீடுகள்தோறும் பறந்திட வேண்டும். திமுக கொடி பறக்காத திமுகவினர் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவளவிழாவை முன்னிட்டு நம் அனைவரது இல்லங்கள் – அலுவலகங்கள் – வணிகவளாகங்களில் கட்சிக்கொடி ஏற்றிக் கொண்டாடுவோம் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதன்படி திமுகவின் பவளவிழாவுக்காக தமிழ்நாடு முழுவதும் திமுகவின் கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் திமுகவின் 75வது பவள விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயம் கட்டிடத்தின் முகப்பில் பவள விழா இலட்சினை நிறுவப்பட்டுள்ளது. இந்த இலட்சினையை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், பவள விழவையொட்டி, அண்ணா அறிவாலயம் மற்றும் இளைஞரணி அலுவலகமான அன்பகம் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.

தென் சென்னை மாவட்ட திமுக சார்பில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு விருதுகளை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

குறிப்பாக பெரியார் விருது – பாப்பம் மாள், அண்ணா விருது – அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது – ஜெகத்ரட்சகன் எம்பி.,, பாவேந்தர் விருது – கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது – வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்தாண்டு புதிதாக மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் பெறுகிறார்.

இது தவிர, கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் கவுரவிக்கப் படுகின்றனர். அந்த வகையில், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கட்சி நிர்வாகிகளுக்கு தலா ரூ.1 லட்சம் பண முடிப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இந்த பண முடிப்பு, மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு வழங்கப்படுகிறது.

விழாவில், துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இவ்விழாவில் பங்கேற்க, தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில், பிரம்மாண்ட அரங்கம் உருவாக் கப்பட்டு வருகிறது. இந்த ஏற்பாடுகளை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கவனித்து வருகிறார். அனைவரும் விழாவை முழுமையாகக் காணும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe. Tragbarer elektrischer generator. Raison sociale : etablissements michel berger.