Amazing Tamilnadu – Tamil News Updates

தீபாவளிக்கு 39 சிறப்பு ரயில்கள்… முன்பதிவுக்கு தயாராகுங்க!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. அதற்கு மறுநாளான வெள்ளிக்கிழமை பணி நாளாகும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை அறிவித்தால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதால், வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இது குறித்து அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும், அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முந்தைய 4 நாட்களுக்கும், பிந்தைய 4 நாட்களுக்கும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகளவு உள்ளது. இதனால் சொந்த ஊர் செல்வோர் தீபாவளியையொட்டி இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளையும், சிறப்பு ரயில்களையும் எதிர்பார்த்துள்ளனர்.

39 சிறப்பு ரயில்கள்

அந்த வகையில் தென்னக ரயில்வே தீபாவளி பண்டிகைக்கு முக்கிய வழித்தடங்களில் 39 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பண்டிகையை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி முதல் தமிழகம், கேரளாவில் இருந்து புதுடெல்லி, அகமதாபாத்துக்கு வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வேக்குட்பட வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூரிலிருந்து…

வரும் 25 ஆம் தேதி முதல், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து மங்களூர், பெங்களூரு, மைசூா், திருவனந்தபுரம், கோவை, திருநெல்வேலி, நாகா்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் 29, நவம்பர் 5 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு, வரும் 29, நவம்பர் 2 தேதிகளில் கோவைக்கு, வரும் 30, நவம்பர் 6 தேதிகளில் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

வரும் 30, நவம்பர் 2 அன்று சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

நவம்பர் 2 அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

நவம்பர் 4 அன்று கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். நவம்பர் 2 அன்று நாகா்கோவில்-மைசூா் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இதேபோல நவம்பர் 15 ஆம் தேதி வரை சென்னை, எா்ணாகுளத்தில் இருந்து புதுடெல்லி, அகமதாபாத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவிலேயே சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Exit mobile version