Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

தீபாவளிக்கு14,086 சிறப்பு பேருந்துகள்… எங்கிருந்தெல்லாம் புறப்படும்?

ந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழக்கிழமை வருவதையொட்டி தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால், சொந்த ஊர் செல்ல நினைப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் ரயில்களில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு முடிவடைந்து விட்டதால், சிறப்பு ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பேருந்துகளையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனை கருத்தில்கொண்டு, தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்துத் துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், வருகிற 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

14,086 சிறப்புப் பேருந்துகள்

தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து அக்டோபர் 28 முதல் 30 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 900 சிறப்பு பேருந்துகள் சேர்ந்து மொத்தமாக 11 ஆயிரத்து 176 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், நவம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரையில், சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்ப தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 3 ஆயிரத்து 165 சிறப்பு பேருந்துகள் சேர்ந்து மொத்தமாக 9 ஆயிரத்து 441 பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

அதேபோல், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரத்து 910 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் 5.83 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 பேருந்து நிலையம்

கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து மாதவரம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய ஐந்து இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 3 இடங்களிலிருந்து மட்டுமே சிறப்பு பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.

வழித்தடம்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்-கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கார்களில் சொந்த ஊர்கள் செல்வோர்…

கார்கள் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்- புகார் அளிக்க…

தீபாவளி சமயத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக
1800 425 6151
044-24749002
044-26280445
044-26281611

ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version