தீபாவளி: பத்திரமாக பட்டாசு வெடிக்க 10 ஆலோசனைகள், முதலுதவிகள்!
தீபாவளி கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது தொடர்பாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளும், பட்டாசு வெடிக்கும்போது கண்ணில் பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்து மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைகளும் இங்கே…
குழந்தைகள், பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
பட்டாசு கொளுத்தும்போது, தளர்வான ஆடைகள், டெரிகாட்டன் / டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக் கூடாது.
பட்டாசு கொளுத்துமிடத்துக்கு அருகில் ஒரு வாளியில் தண்ணீரையோ அல்லது மணலையோ வைத்துக்கொள்ள வேண்டும்.
பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் இடங்களான சமையல் அறையிலோ பூஜை அறையிலோ வைக்கக் கூடாது.
பட்டாசை கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகிலோ வைத்து பற்றவைக்கக் கூடாது. பட்டாசுக்கும் நமக்கும் ஒரு கை நீளம் இடைவெளி இருக்க வேண்டும் .
மூடிய பெட்டிகளில் அல்லது பாட்டில்களின் மேல் வைத்து பட்டாசுகளை வெடிக்கச் செய்யாதீர்கள். கண்ணாடிப் பொருள்கள் வெடித்து கண்களில் பட்டு, கண் பார்வை பாதிப்படையக் கூடும்.
ராக்கெட்டுகளை குடிசைகள் இல்லாத வெட்ட வெளிப் பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.
பட்டாசுகளை மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளிலும், தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்கக் கூடாது.
மருத்துவமனைக்கு அருகிலும், முதியோர் இல்லங்களுக்கு அருகிலும் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிருங்கள்.
விலங்குகளைத் துன்புறுத்தும் வகையிலும், அவை பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
கண்ணில் பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்…
கண்ணைத் தேய்க்கக் கூடாது.
கண்ணை அழுத்தக் கூடாது.
உடனடியாகக் கண்ணிலும் உடலிலும் உள்ள அனைத்துத் தீக்காயப் பகுதிகளையும் சுத்தமான குடிநீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.
நேரம் தாமதமில்லாமல் அருகில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று கண் மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவை அணுகலாம்.
அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கலாம்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் காயத்தின் மேல் ஊற்றக் கூடாது.