Amazing Tamilnadu – Tamil News Updates

தீபாவளி: பட்டாசால் ஒளிர்ந்த வானம்… குறைந்து போன காற்றின் தரம்!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் தீபாவளியை வரவேற்கும் வகையில் நேற்று முன்தினம் மாலை முதலே பொதுமக்கள் இரவு முதலே தலைநகர் சென்னை உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

தீபாவளி பண்டிகை தினமான நேற்று தமிழக அரசின் சார்பில் பட்டாசுகள் வெடிக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அதை மீறி காலை தொடங்கி இரவு வரை அவ்வப்போது பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே தான் இருந்தது.

இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக காற்று மாசு ஏற்பட்டது. சென்னையில், பல இடங்களில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மோசமான காற்றின் தரம்

காற்றின் தரக்குறியீடு 50-க்கு கீழ் இருந்தால், சிறப்பாக இருக்கிறது என்றும், 51-100 இருந்தால், திருப்திகரமாக இருக்கிறது என்றும், 101-க்கு மேல் சுமார் என்றும், 201-க்கு மேல் போனால் மோசம் என்றும் அளவிடப்படுகிறது. சென்னை பெருங்குடி, ஆலந்தூர், வேளச்சேரி அருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில், காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையை எட்டியுள்ளது. இதில் பெருங்குடியில் காற்றின் தரம், 262 ஆகவும், ஆலந்தூர் 258, அருகம்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என்று காற்றின் தரக்குறியீடு மோசன நிலையில் உள்ளது. அதேபோல் சென்னையின் எந்த பகுதியிலும் காற்றின் தரம் சிறப்பானதாக இல்லை என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது.

பட்டாசால் ஏற்பட்ட தீ விபத்து

அதே சமயம், தீபாவளி வெடிவிபத்துகளைத் தடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. காவல்துறை தரப்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததன. ஆனாலும், தீபாவளியின்போது பட்டாசுகள் மூலம் ஏற்படும் தீ விபத்துகள் என்பது தவிர்க்க முடியாத நிகழ்வாகவே ஆகிவிட்டது.

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் நேற்று 11 இடங்களில் ராக்கெட் வெடிகளால் தீவிபத்துக்கள் ஏற்பட்டது தெரியவந்து உள்ளது. அதாவது கோவை மாநகரில் ஒலம்பஸ் பெருமாள்கோவில் வீடு, மேட்டுப்பாளையத்தில் 2 வீடுகள், தொண்டாமுத்தூர், அன்னூர், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் வெடிகள் விழுந்து குடிசை வீடுகள் தீப்பிடித்தன. ஆனாலும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் வெடி வெடித்ததில் பல்வேறு இடங்களில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

அதே சமயம், இந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்துகள் கடந்த ஆண்டை விட குறைவு என தமிழ்நாடு தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் 254 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 102 தீ விபத்துகள் பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் நிகழ்ந்தது.

ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீபாவளி அன்று தமிழகத்தில் 150 தீ விபத்துகள் பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் 48 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தீ விபத்துகள் மிக குறைந்த எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளது என்று தீயணைப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version