தீபாவளி பண்டிகைக்கு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸால பணம் மற்றும் சில பரிசு பொருட்களைக் கொடுப்பது வாடிக்கையான ஒன்று தான்.
என்றாலும், இதில் சில தொழிலதிபர்கள் தங்களுடைய வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாக கருதாமல், தனது நிறுவன வளர்ச்சிக்கு காரணமாக விளங்கக் கூடிய ஊழியர்களை தன் குடும்பம் போலவே கருதி தீபாவளி பண்டிகையையொட்டி, அவர்கள் நினைத்தே பார்த்திராத வகையில் ரொக்கப் பணம், புத்தாடைகள், இனிப்பு வகைகள் மற்றும் மெகா பரிசுகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்வது உண்டு.
அந்த வகையில், குஜராத்தைச் சார்ந்த சாவ்ஜி தன்ஜி தோலாகியா என்ற இந்தியாவின் மிகப்பெரிய வைர வியாபாரி, தீபாவளி போனஸாக தனது நிறுவன ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் பரிசு ஏக பிரசித்தம். விலையுயர்ந்த நகைகள், கார்கள், பிளாட்கள் மற்றும் FD எனப்படும் வைப்பு நிதி பத்திரங்கள் எனக் கொடுத்து அசத்துவார். இவரைப் போன்று மேலும் பல தொழிலபதிர்களும் நாட்டில் பரவலாக உள்ளனர்.
தங்க மோதிரம் வழங்கிய தமிழக தொழிலதிபர்
இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் இதேபோன்ற ஒரு தொழிலதிபர் தனது ஊழியர்களுக்கு தீபாவளிக்கு அசத்தலான பரிசுகளை வழங்கி அவர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள பொறையார் காத்தான்சாவடி பகுதியில் ‘லக்கிஷா குரூப்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் ஏ.கே.சந்துரு. இளம் தொழிலதிபரான இவர், கடந்த ஆண்டு 500 ரூபாய் நோட்டுகளால் கிரீடம், மாலை ஆகியவற்றை செய்து ஒவ்வொருவரையும் கௌரவித்தார்.
இந்த நிலையில் இந்தாண்டு தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அனைத்து ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் புத்தாடைகள், பட்டாசு, இனிப்பு வகைகள் அடங்கிய பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை வழங்கினார்.
இது மட்டுமல்லாமல், தனது வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும் ஊழியர்களுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து, அசைவ விருந்தளித்து ஊழியர்களை வியக்க வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு 500 ரூபாய் நோட்டு மாலை, இந்த ஆண்டு தங்க மோதிரம், அடுத்த ஆண்டு என்ன பரிசு கொடுத்து அசத்தப்போகிறாரோ?