தீபாவளி ரிலீஸ் படங்கள்… ஆரவாரம் மிஸ்ஸிங்… ஏன்?
தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் என்பது கலெக்சனை வாரிக்கொடுக்கக் கூடியவை. இத்தகைய நாட்களைக் குறிவைத்து எம்ஜிஆர் – சிவாஜி தொடங்கி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என அந்தந்த கால உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸாவது வாடிக்கையான ஒன்று.
ஆனால் சமீப ஆண்டுகளாக புதிதாக ரிலீஸாகும் படங்களை ஓரிரு மாதங்களிலேயே தொலைக்காட்சிகளில் போடுவது, ஓடிடி வருகை, மொபைல் போன்களிலேயே படங்களைப் பார்த்துவிடுவது போன்ற காரணங்களால் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
இன்றைய தினத்துக்கு, கடந்த காலங்களில் ரஜினி – கமல் ரசிகர்கள் எப்படி தியேட்டர்களில் திருவிழா கொண்டாடினார்களோ, அப்படி தான் விஜய், அஜித் ஆகியோரது ரசிகர்களும். விஜய், அஜித் படங்கள் ரிலீஸாகும் தேதி தான் அவர்களது ரசிகர்களைப் பொறுத்தவரை தீபாவளி, பொங்கல் எல்லாம். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு இவர்கள் இருவரது படங்களும் ரிலீஸ் இல்லை. இந்த தீபாவளி என்றில்லை. கடந்த இரண்டு வருடங்களாக ரஜினி நடித்த படமும், ஐந்து வருடங்களாக விஜய் நடித்த படமும், கடந்த 9 வருடங்களாக அஜித் நடித்த படமும், கமல்ஹாசன் நடித்த படமும் தீபாவளிக்கு வெளியாகவில்லை.
இதனாலேயே என்னவோ, இந்த தீபாவளி ரிலீஸ் படங்கள் குறித்த பெரிய பரபரப்போ அல்லது ஆரவாரமோ எதுவும் காணப்படவில்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அமரன், ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் மற்றும் வளர்ந்து வரும் ஹீரோவான கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் ஆகிய 3 படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாகின்றன.
வழக்கமாக இதுபோன்ற நாட்களில் ரிலீஸுக்கு 2 அல்லது 3 தினங்களுக்கு முன்னரே டிக்கெட் புக்கிங் ஃபுல் ஆகிவிடும் நிலையில், இந்த முறை அப்படி எதுவும் இல்லை. இதில் சிவகார்த்திகேயன் தான் அடுத்த விஜய் என்ற ரீதியில் பில்டப் கொடுக்கப்படும் நிலையில், அவரது அமரன் படத்துக்கு மட்டும் ஓரளவு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த படம் தான் பிரீ புக்கிங்கில் டாப் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், தீபாவளிக்கு ரிலீஸாகும் 3 படங்கள் குறித்த கண்ணோட்டமும், அவற்றின் தியேட்டர் புக்கிங் நிலவரமும் இங்கே…
அமரன்
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், உண்மை கதாபாத்திரமான மேஜர் முக்குல் வரதராஜன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் பாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.
கமல்ஹாசன் தயாரித்திருக்கும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டிக்கெட்டுகள் பிரீ-புக்கிங் ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஃபுல் ஆகத் தொடங்கின. என்றாலும் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் இன்னும் டிக்கெட்டுகள் விற்கப்படாமல் இருக்கின்றன. படம் ரிலீஸான பின்னர் வெளியாகும் விமர்சனங்கள் அடிப்படையில் படத்துக்கான கூட்டம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தீபாவளிக்கு வியாழன் தொடங்கி ஞாயிறு வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், ஓரளவு நல்ல ஓப்பனிங் கிடைத்து கலெக்சன் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் நிலவுகிறது.
பிரதர்
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றித் திரைப்படங்களை தந்த இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ளது பிரதர். ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு சகோதரியாக பூமிகாவும், தாயாக சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப கதையை மையமாக வைத்து, ரசிகர்களை சிரிக்க வைக்கும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
பெரிய அளவில் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டப் போதிலும், அமரன் மற்றும் ப்ளடி பெக்கர் படத்துடன் ஒப்பிடுகையில் இந்த படத்திற்கு குறைவான தியேட்டர்களே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல தியேட்டர்களில் இப்படத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஓரளவு திருப்தியாக காணப்பட்டாலும், ஒரு சில தியேட்டர்களில் பிரீ புக்கிங் பெரிய அளவில் இல்லாமல் ‘டல்’ ஆகவே உள்ளது. தொடர் விடுமுறை இருப்பதால், அநேகமாக தீபாவளி முதல் புக்கிங் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளடி பெக்கர்
தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் ஹீரோவாக உருவெடுத்துள்ள கவின் நடித்திருக்கும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தை, புதுமுக இயக்குநரான சிவ பாலன் முத்துக்குமார் இயக்கியிருக்கிறார். பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை முதன்முறையாக தயாரித்திருக்கிறார்.
பிச்சை எடுக்கும் ஒருவன் எதிர்பாரா விதமாக கொலைகார கும்பலிடம் சிக்கிக் கொள்கிறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பது இப்படத்தின் கதை. டார்க் காமெடி பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கான டிக்கெட்டுகள் வேகமாக புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. என்றாலும், சில தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்கப்படாமல் இருக்கின்றன. ஒரு சில திரையரங்குகளில் இந்த படத்திற்கு 9 மணி காட்சி முதல் காட்சியாக கொடுக்கப்பட்டுள்ளது. விமர்சனங்கள் அடிப்படையில் டிக்கெட் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கூறிய மூன்று நேரடி தமிழ்ப் படங்களைத் தவிர, துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ என்ற தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகியுள்ள படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.