தமிழக ஆளுநருக்கு பாராட்டு… இயக்குநர் பார்த்திபன் பேச்சால் எழுந்த சலசலப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் புகழ்ந்தது, தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் மாளிகையில் நேற்று உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ” நிகழ்ச்சியில் தமிழ் அழகாக மணந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு இவ்வளவு அழகாக பாதுகாக்கப்படுவதற்காக ஆளுநருக்கு என்னுடைய மரியாதையை தெரியப்படுத்துகிறேன்.
நான் தமிழில் பேசியது, ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக் கொள்கிறார், அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழிலேயே பேசலாம் என்று சொன்னார்கள். ஆகவே, தமிழ் புத்தகங்களை அவருக்கு நான் பரிசளித்துள்ளேன். ஒரு மனிதன் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் அவன் யார் என ஆளுநருக்கு எடைபோடத் தெரிகிறது.ஆளுநருடன் உரையாடியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் அவரை ஒருமுறை சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது எனக்கு அன்பு வந்துவிட்டது. ஆளுநர் செய்யும் நல்ல விஷயங்களுக்கு நானும் உடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
வன்னியரசு எதிர்ப்பு
இந்த நிலையில் பார்த்திபனின் இந்த பேச்சு தமிழ்த் திரையுலக வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுக மற்றும் விசிக ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “ஆளுநரை புகழ்வது தமிழக உணர்வுகளுக்கு எதிரானது,” என்று திமுக ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசிடமிருந்து அவரது பேச்சுக்கு இன்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது தொடர்பாக வன்னியரசு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “திரைத்துறையில் தங்களுக்கென புதிய பாதை அமைத்து வெற்றி பெற்றவர். வசனங்களிலும் உரையாடலிலும் சமூக அக்கறையோடும் தமிழ் பண்பாட்டை காக்கும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர். அந்த ஒத்த செருப்பு ஒன்றே போதும் தங்களுடையை தனித்துவத்துக்கும் பண்பாட்டுக்கும் சான்று. மிகுந்த நம்பிக்கையொளியோடு தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தவர்.

ஆனால், நேற்றைய ஆளுனர் மாளிகை விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை அந்த நம்பிக்கையை நொறுக்கி விட்டது. ஆளுனர் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறாரா? அல்லது இழிவு படுத்துகிறாரா? இதே ஆளுனர் மாளிகையில் பல நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை. அதை திட்டமிட்டே அவமானப்படுத்துகிறார். கடந்த சட்டப் பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போதே அவமதித்து வெளியேறியவர் திரு.ரவி அவர்கள். இது தான் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் அழகா?
இப்படி ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கையும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கையும் ஆதாரங்களுடன் அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ஆளுனர் ரவி போன்றோரை புகழ்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு. ஆனால்,தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுனருக்கு தங்களைப்போன்ற புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
என்ன சொல்கிறது திரையுலக வட்டாரம்?
பார்த்திபன், தனது தனித்துவமான சினிமா பாணி மற்றும் நேரடியான பேச்சு மூலம் அறியப்பட்டவர். ஆளுநரைப் புகழ்ந்த அவரது பேச்சு, அரசியல் உள்நோக்கம் இல்லாத, தனிப்பட்ட பாராட்டாகவே இருக்கலாம். இது ஒரு நிகழ்ச்சியில் உரையாடலின் போது வெளிப்பட்ட கருத்து மட்டுமே, அரசியல் நிலைப்பாடு அல்ல” என்று பார்த்திபனுக்கு நெருக்கமான ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் கூறினார்.
ஆனால், ” ஆளுநர் ரவியின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் அனைவரும் அறிந்த ஒன்று. இத்தகைய நிலையில், பார்த்திபனின் கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே பலரால் பார்க்கப்படுகிறது. சிலர், இது ஆளுநருக்கு ஆதரவான பொதுமக்கள் கருத்தை உருவாக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ்த் திரையுலக வட்டாரத்தில், “பார்த்திபன் எப்போதும் எதிர்பாராத கோணத்தில் பேசுபவர். இது அவரது தனிப்பட்ட பாணியாக இருக்கலாம், ஆனால் இது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது” என்று ஒரு மூத்த இயக்குநர் தெரிவித்தார். மற்றொரு நடிகர், “திரையுலகில் பலர் ஆளுநரை விமர்சிக்கும் போது, பார்த்திபன் எதிர் திசையில் செல்வது அவரது பிம்பத்தை பாதிக்கலாம் ” என்று கருத்து தெரிவித்தார். பாஜக ஆதரவு திரைப்பட கலைஞர்கள் மட்டும், “ஆளுநர் தமிழ் பண்பாட்டை மதிக்கிறார், பார்த்திபனின் பாராட்டு நியாயமானது,” என்று ஆதரவு தெரிவிக்கின்றனர்.