தேவரா: சினிமா விமர்சனம் – என்.டி.ஆர் ரசிகர்களுக்கு ஓகே; ஆனால்…
கொரட்டலா சிவாவின் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், சைஃப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்பட பலரின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தேவரா 1’, தெலுங்கு, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் தனித்துக் களமிறங்கியிருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.
பான் இந்தியா படமாக பார்க்கப்பட்ட ‘தேவரா 1’, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பு வரவேற்பைப் பெற்றதா? பார்ப்போம்.
தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் அமைந்திருக்கிறது ரத்தினகிரி. இங்குள்ள நான்கு கடலோர கிராமங்களை செங்கடல் என்கிறார்கள். இவர்கள் பயம் அறியாதவர்கள். இங்குள்ள மக்களில் ஆங்கிலேய ஆதிக்கத்துக்காக போராடிய தேவராவும் (ஜூனியர் என்.டி.ஆர்) ஒருவர். செங்கடல் மக்களால் மதிக்கப்படக் கூடியவராக இருக்கிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தலைவரான பைரா (சைஃப் அலிகான்) சொல்லும் வேலையை மக்கள் செய்கின்றனர். ஒருகட்டத்தில் தாங்கள் செய்வது ஆயுதக் கடத்தல் எனத் தெரிய வந்ததும் அதற்கு தேவரா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனை விரும்பாத பைரா, தேவராவைக் கொல்வதற்கு திட்டம் போடுகிறார்.
அவர்களிடமிருந்து தப்பிக்கும் தேவரா தலைமறைவாகிவிடுகிறார். நீண்டகாலம் கழித்து தேவராவின் மகனான வரா (ஜூனியர் என்.டி.ஆர்) வருகிறார். தந்தையைப் போல இல்லாமல் கோழையாக வளர்கிறார். அவருக்கு வீரம் வந்ததா? தேவரா எங்கு சென்றார்? தந்தையின் லட்சியத்தை மகன் நிறைவேற்றினாரா என்பது தான் தேவரா படத்தின் கதை.
தந்தை, மகன் என இரு கதாபாத்திரங்களிலும் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது. படம் தொடங்கியது முதல் இறுதிக் காட்சி வரையிலும் கதாநாயகனின் ஃபிளாஷ்பேக் சொல்லப்படுவது தொடங்கி நடிகர் பட்டாளம் வரையில் ‘பான் இந்தியா’ படத்துக்கான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.
ஆனால், தேவரா என்ற வீரனின் கதையாக காட்டப்பட்டாலும் அதற்கு வலு சேர்ப்பதைப் போல திரைக்கதை அமைக்கப்படவில்லை. மகன் கதாபாத்திரத்தில் வரும் ஜூனியர் என்.டி.ஆரின் வருகை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அதுவும் திரைக்கதை அமைப்பால் சற்று தடுமாறுகிறது.
பிரகாஷ் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ற கச்சிதமான நடிப்பைக் கொடுத்துள்ளனர். ஜான்வி கபூரின் முதல் தெலுங்கு படமாக தேவரா பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் தங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். ஆனால் பெயர் சொல்லும்விதமாக அமையவில்லை.
படத்தின் மிகப் பெரிய பலமாக ரத்னவேலுவின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. தேவரா படத்துக்கு அனிருத்தின் பின்னணி இசை வலுவைக் கூட்டியுள்ளது. ஆனால் பாடல்கள் என்று பார்த்தால் படத்தின் கதை ஓட்டத்துடன் பெரிதாக பொருந்தவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சுத்தமல்லி’ பாடலும் படத்தின் பிளஸ் ஆக மாறவில்லை.
மூன்று மணி நேரம் ஓடும் தேவரா படத்திற்கு திருப்பங்களை ஏற்படுத்தக் கூடிய கதாபாத்திரங்கள், நட்சத்திரக் கூட்டம் என அனைத்தையும் பயன்படுத்தி பான் இந்தியா படமாக எளிதாக மாற்றியிருக்க முடியும். மையக் கதை என்பது சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் படத்தை ஒட்டியே இருக்கிறது.
தெலுங்கு சினிமாவுக்கு உண்டான மசாலாவுடனும் நல்ல டீமுடன் களமிறங்கிய இயக்குநர் சிவா, திரைக்கதை அமைப்பில் கோட்டைவிட்டுள்ளார். படத்தின் நீளமும் காட்சியமைப்பும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தைத் தர தவறிவிட்டது. படத்தின் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். ஒரே ஒரு திருப்பத்துடன் மிகவும் ஆவரேஜான கிளைமாக்ஸ். இருப்பினும் என்.டி.ஆர் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு மாஸ் விருந்துதான்.