” 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யக் கூடிய நடைமுறை ‘தென் மாநிலங்களின், குறிப்பாக தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கூறி இருந்தார்.இதனால் தமிழகம் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள தனது 39 மக்களவை தொகுதிகளில் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும், தென்னிந்திய மாநிலங்கள் உள்பட நாட்டில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.
ஆனால், இது விஷயத்தில் அமித் ஷாவின் வாக்குறுதியும் விளக்கமும் மழுப்பலாக இருப்பதாகவும், தெளிவாக இல்லை என்றும் திமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
அது என்ன pro-rata..? – திமுக எழுப்பும் சந்தேகம்
இது தொடர்பாக சென்னை – அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, “
அமித் ஷா பேசுகிறபோது விகிதாசார அடிப்படையில்தான் மறுசீரமைப்பு அமையும், அப்படி விகிதாசார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது தமிழ்நாட்டிற்கு ஒரு தொகுதி கூட குறையாது என இந்தியில் அறிவித்து இருக்கிறார்.
அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ப்ரோ – ரேட்டா (pro-rata) எனச் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த ப்ரோ – ரேட்டா என்பது இப்போது இருக்கும் தொகுதிகளின் அடிப்படையில் உயருமா அல்லது மக்கள் தொகை அடிப்படையில் உயருமா என்பதற்கு, எந்த பதிலும் இல்லை.

எங்களின் எண்ணிக்கைக் குறையக் கூடாது என்பது மட்டுமல்ல; நீங்கள் கொண்டு வருகிற எந்தவொரு திட்டத்திலும் எங்களுக்கு அதே எண்ணிக்கையை வைத்துக்கொண்டு வட மாநிலங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் அதிகமாக கொடுத்தாலும், அது அநீதிதான் என்பதில் நாங்கள் மிக தெளிவாக இருக்கிறோம்.
பாஜக, எதனையும் வெளிப்படையாகச் சொல்வதில்லை, அவர்கள் அரசியல் நேர்மையற்றவர்கள். அதனால்தான் பாஜகவை நம்ப முடியாது என்று சொல்கிறோம்” எனக் கூறி இருந்தார்.
‘அமித் ஷா விளக்கத்தை ஏற்க முடியாது’
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் 2026 ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படும் போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் அனைவர் மத்தியிலும் நிலவுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது தொடர்பாக அளித்துள்ள விளக்கம் தெளிவாக இல்லை. தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-ஐ விட குறையாது என்று தான் கூறியிருக்கிறார். மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை விழுக்காடு அதிகரிக்கப்படுகிறதோ, அதே விழுக்காடு தமிழக தொகுதிகளும் அதிகரிக்கப்படும் என்று அவர் கூறவில்லை. அதனால் அந்த விளக்கத்தை ஏற்க முடியாது.
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை இப்போதுள்ள அளவில் தொடர்ந்தால் தமிழகத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆக தொடர வேண்டும். மூன்றில் ஒரு பங்கு உயர்த்தப்பட்டு 721 ஆக உயர்த்தப்பட்டால் தமிழகத் தொகுதிகளின் எண்ணிக்கை 52 ஆக உயர்த்தப்பட வேண்டும். ஒருவேளை மக்களவையில் இப்போதுள்ள இருக்கைகளின் அடிப்படையில் 888 ஆக உயர்த்தப்பட்டால், தமிழகத்தின் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதே விகிதத்தில் 64 ஆக உயர்த்தப்பட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடகா முதல்வரும் கண்டனம்
இதனிடையே, “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என்று அமித் ஷா கூறியுள்ளது திசைதிருப்பும் செயல். தவறான தகவல்கள் அடிப்படையில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை மட்டம்தட்டும் வகையில் அமித்ஷா பேசியிருக்கக்கூடும்” என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளனர்.