தொகுதி மறுவரையறை: தாய் மொழியில் எதிர்ப்பு முதல் தமிழக பாரம்பரிய பரிசு பெட்டகம் வரை!

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் சென்னை, கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை தொடங்கியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டம், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பில் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.
2026 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
தொகுதி மறுவரையறை பற்றிய விவாதம் நீண்ட காலமாக இந்திய அரசியலில் பேசுபொருளாக உள்ளது. 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்போதைய தொகுதிகள் வரையறுக்கப்பட்டன. ஆனால், 2026 ல் புதிய கணக்கெடுப்பின் பின்னர் மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்டால், வடமாநிலங்களுக்கு அதிக இடங்களும், தென்மாநிலங்களுக்கு குறைவான இடங்களும் கிடைக்கும் என அஞ்சப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 8 முதல் 10 தொகுதிகள் வரை குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னோடியாகத் திகழும் தமிழ்நாட்டிற்கு அநீதியாக அமையும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, மார்ச் 5 அன்று சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தென்மாநில எம்.பி.க்களைக் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இன்றைய கூட்டம் நடைபெறுகிறது.
ஸ்டாலின் விடுத்த அழைப்பு
இந்தக் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் நேரடியாகக் கலந்துகொண்டுள்ளனர். கர்நாடகாவிலிருந்து துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மேற்கு வங்கத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள், ஒடிசாவிலிருந்து பிஜு ஜனதா தளம் பிரதிநிதிகள் என மொத்தம் 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் மார்ச் 8 அன்று ஏழு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்திருந்தார்.

தாய்மொழிக்கு முக்கியத்துவம்
இந்தக் கூட்டத்தில் தாய்மொழிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பங்கேற்கும் பிரதிநிதிகளின் பெயர்கள் அவரவர் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான பிரதிநிதிகளின் பேச்சுகள், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் உடனுக்குடன் மொழிபெயர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது, பன்மொழி பண்பாட்டைக் கொண்ட இந்தியாவின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய பரிசுப் பெட்டகம்
கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பரிசுப் பெட்டகம் வழங்கப்படுகிறது. இதில், பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகியவை அடங்கும். மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட அழகிய பெட்டியில் இவை அடுக்கப்பட்டுள்ளன. இது, தமிழ்நாட்டின் பாரம்பரியம், கைவினைத்திறன் மற்றும் பொருளாதாரத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
உரிமைப் போராட்டத்தில் ஒரு மைல் கல்

இந்தக் கூட்டம், மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை எதிர்த்து, விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையை தொடர்ந்து பின்பற்றவோ அல்லது மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கவோ மத்திய அரசை வற்புறுத்துவது இதன் முக்கிய கோரிக்கையாக உள்ளது. தென்மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒடுக்கப்படுவதை தடுக்கவும், இந்தியாவின் கூட்டாட்சி தன்மையை பாதுகாக்கவும் இது முயல்கிறது.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில், எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது. தமிழ்நாட்டின் உரிமைப் போராட்டத்தில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படும் இந்த கூட்டத்தின் மூலம் வெளிப்படும் மாநிலங்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்பு, மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்குமா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.