தொகுதி மறுசீரமைப்பு: “மணிப்பூர் கதிதான் ஏற்படும்…” – எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்!

2026 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்கும் மத்திய அரசின் திட்டம், தென்மாநிலங்களில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பின் பேரில் மொத்தம் 7 மாநிலங்களில் இருந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உட்பட கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்துகொண்ட நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் சென்னையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.
கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநில ஆளும் கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் ஒன்றுகூடியது இதுவே முதல்முறை எனப் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியாவின் தனித்தன்மை பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களில் உள்ளது என வலியுறுத்திய ஸ்டாலின், மாநிலங்களுக்கு சுயாட்சி இருந்தால் மட்டுமே உண்மையான கூட்டாட்சியும் வளர்ச்சியும் சாத்தியம் என்பதை சுட்டிக்காட்டினார். இந்திய அரசியலமைப்பு மேதைகளால் கூட்டாட்சி ஒன்றியமாக உருவாக்கப்பட்ட நாட்டில், பல காலகட்டங்களில் இதற்கு சோதனைகள் வந்தாலும், ஜனநாயக இயக்கங்கள் அதைத் தடுத்துள்ளன என்றார். தற்போதைய தொகுதி மறுசீரமைப்பு திட்டமும் அத்தகைய ஆபத்து என்பதால், இதை எதிர்க்க ஒன்றுகூடியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மணிப்பூர் நிலைமை…
மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு, மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களை பாதிக்கும் என்ற ஸ்டாலின், மணிப்பூர் நிலைமையை உதாரணமாகக் கூறி, இன்று மணிப்பூருக்கு நடப்பது நாளை நமக்கும் நடக்க வாய்ப்பு உள்ளது என மறைமுகமாக எச்சரித்தார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவதன் மூலமாக நமது எண்ணங்களைச் சொல்வதற்கான வலிமை குறைகிறது. இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. ஆனால் நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது அல்லது நமது பிரதிநிதித்துவம் குறைவது என்பதை நம்முடைய அரசியல் வலிமையை குறைப்பதாகத்தான் பார்க்க வேண்டும்.
வரக்கூடிய பாதிப்புகள்…
இது வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல – இது நமது அதிகாரம், நமது உரிமைகள் மற்றும் நமது எதிர்காலத்தின் நலன்களைப் பற்றியது. பிரதிநிதித்துவம் குறைந்து வருவதால், நமது மாநிலங்கள் நமக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு கூட போராட வேண்டி வரும். நமது விருப்பம் இல்லாமல் நமக்கான சட்டங்கள் வடிவமைக்கப்படும். நமது மக்களைப் பாதிக்கும் முடிவுகள், நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவுகளைச் சந்திப்பார்கள். மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள். உழவர்கள் ஆதரவின்றி பின்தங்குவார்கள். நமது பண்பாடு, அடையாளம் மற்றும் முன்னேற்றம் ஆபத்தை சந்திக்கும். காலம் காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வரும் சமூகநீதி பாதிக்கப்படும். குறிப்பாக பட்டியலின, பழங்குடி மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

பாஜக-வின் உள்நோக்கம்
மேலும், ஜனநாயக பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தாம் எதிர்க்கவில்லை எனவும், ஆனால் அது நியாயமாக இருக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார். இது குறித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் குழப்பமான விளக்கத்தையும், பிரதமர் மோடியின் தென்மாநில இட இழப்பு குறித்த பேச்சையும் மேற்கோள் காட்டி, பாஜக-வின் உள்நோக்கத்தை விமர்சித்தார்.
இந்தக் குழுவுக்கு ‘நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு’ எனப் பெயரிடவும், தொடர் நடவடிக்கைகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சட்ட-அரசியல் வல்லுநர்கள் குழு அமைக்கவும் முன்மொழிந்தார். “ஒன்றுபட்டால் வெற்றி சாத்தியம்” எனக் கூறி, பிரதிநிதித்துவம் குறையவிடாமல் போராடுவோம் என உறுதியளித்து தனது உரையை முடித்தார்.