தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க வழி வகுக்கிறதா..?

நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது. 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவ்வாறு 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு, நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள தனது 39 மக்களவை தொகுதிகளில் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் எச்சரித்திருந்தார். மேலும், ‘இந்த நடவடிக்கை தமிழகத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி’ என்றும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காக தமிழகத்துக்கு கிடைக்கும் பரிசா இது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாகை மாவட்ட திமுக செயலாளர் இல்லத் திருமண விழாவை தலைமையேற்று நடத்தினார்.
‘அதிக குழந்தைகள் பெற்றால் அதிக எம்.பி-க்கள்’

அப்போது பேசிய ஸ்டாலின், “எம்.பி.க்களின் எண்ணிக்கை மக்கள் தொகையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. எனவே, மணமக்கள் இப்போது குழந்தை பெற அவசரப்பட வேண்டாம் என்று நான் கூற மாட்டேன். முன்பெல்லாம் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள் என்று சொல்வது வழக்கம். ஆனால், இப்போது அப்படி சொல்ல அவசியமில்லை; அதையும் நாம் சொல்லக்கூடாது. ஏனென்றால், எம்.பி.க்களின் எண்ணிக்கை மக்கள்தொகையைப் பொறுத்து தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதிக மக்கள் தொகை இருந்தால் தான் அதிக எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது” என்று தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் எப்படி மக்கள் தொகை அதிகரிப்பை நோக்கி தள்ளப்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக சற்று கேலியுடன் குறிப்பிட்டார்.
அனைத்து கட்சிக் கூட்டம்
தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக அரசு கூட்டியுள்ள கூட்டத்தில் கட்டாயம் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ” மும்மொழிக் கொள்கையையும், தொகுதி மறுசீரமைப்பையும் கட்டாயப்படுத்தி கொண்டுவந்து தமிழ்நாட்டின் உரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தை சிதைக்க திட்டமிடுகிறது மத்திய பாஜக அரசு. அதனை எதிர்க்கவே அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
அனைத்து கட்சி கூட்டத்துக்கு பெரும்பாலான கட்சிகள் வருவதாக கூறியுள்ளனர். ஆனால் சிலர், இவன் என்ன அழைப்பது, நாம் என்ன போவது என்று இதில் கௌரவம் பார்க்காதீர்கள். தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருக்கிற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது, வர இயலாது என்பவர்களுக்கு நான் சொல்ல வேண்டியது, ‘இது திமுகவுக்கான பிரச்னை அல்ல. இதனை அரசியலாக பார்க்காமல், தமிழ்நாட்டின் உரிமைக்காக என்பதை உணர்ந்து முடிவெடுங்கள்’ என்பதே.

நாடாளுமன்றத்தில் இப்போது தமிழ்நாடு பெற்றிருக்கிற 39 மக்களவை உறுப்பினர்களை வைத்துக்கொண்டே, ஒவ்வொன்றையும் போராடிதான் பெறவேண்டியதாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பு என்கிற பெயரில் மேலும் குறைப்பது என்பது முற்றிலும் தமிழ்நாட்டு உரிமைக்கு எதிரானது. ஆகவே, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தால்தான் நாம் உரிமையை மீட்க முடியும் என்ற ஒருமித்த நோக்கத்துடன் அனைவரும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கௌரவம் பார்க்காமல் பங்கேற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.