டெல்லி சட்டசபை தேர்தல்: ஆட்சியைப் பிடித்த பாஜக… ஆம் ஆத்மிக்கு தோல்வி ஏன்?

டெல்லி சட்டசபைக்கு, இம்மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் பாஜக – ஆம் ஆத்மி இடையே தான் கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கம் முதலே பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்த நிலையில், ஆம் ஆத்மி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பல இடங்களை இழந்தது.
ஆட்சியைப் பிடிக்கும் பாஜக
பிற்பகல் 5 மணி நிலவரப்படி, பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. 28 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதாவது 48 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 36 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும் என்ற நிலையில், அந்த எண்ணிக்கையையும் தாண்டி பாஜக வலுவான நிலையில் ஆட்சியமைக்க உள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது பாஜக-வின் நீண்ட கால கனவு. அதற்கான வாய்ப்பு தற்போது அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி
ஆம் ஆத்மி 6 இடங்களில் வெற்றியும், 16 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஜங்புராவில் போட்டியிட்ட மணீஷ் சிசோடியா, ஷகுர் பஸ்தியில் போட்டியிட்ட சத்யேந்திர் ஆகிய ஆம் ஆத்மியின் பிற முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவினர்.
அதே சமயம், கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 989 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி வீழ்த்தியுள்ளார்.
ஆம் ஆத்மிக்கு தோல்வி ஏன்?
ஆம் ஆத்மி கட்சி உருவானதை ஆராய்ந்தால், அது அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளிலிருந்து உருவானது. இந்த நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான மணீஷ் சிசோடியா முதலில் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து இதே வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டதும் அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின. அக்கட்சி மீதான இமேஜும் காலியானது.

அதே சமயம் பாஜக, வேண்டுமென்றே விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு, தங்களது கட்சியை முடக்க வேண்டும் என பொய்யான வழக்குகளைத் தொடர்ந்ததாக ஆம் ஆத்மி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது உண்மையோ இல்லையோ கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதிலிருந்தே அக்கட்சி பின்னடைவைச் சந்தித்தது. இது ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் பாஜக-வின் கணக்கு தப்பவில்லை.
மேலும், அள்ளி வீசப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போனதும் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், டெல்லியில் வளர்ச்சிப் பணிகளும் கேள்விக்குறியாகின. 2015 ல் அனைவருக்கும் குழாய் நீர் இணைப்பு என்ற வாக்குறுதியும், ‘டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து’ என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ‘ரோஸ்கர் பட்ஜெட்’ மற்றும் ’20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்’ என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
மேலும் டெல்லியில் நிலவிய காற்று மாசுபாடு, வழங்கிய வாக்குறுதிக்கு ஏற்ப யமுனை நதி தூய்மைப்படுத்தப்படாமல் போனது போன்ற காரணங்களும் ஆம் ஆத்மி தோல்விக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.
அத்துடன் கட்சியின் அமைப்பு மற்றும் நிர்வாக அம்சம் இரண்டிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு குறுகிய பார்வையைக் கொண்ட அணுகுமுறையையே கொண்டிருந்ததாகவும், தொலை நோக்கு பார்வை அக்கட்சிக்கு இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததால் மக்களிடையே இயல்பாக எழும் ஆட்சிக்கு எதிரான மனநிலையும் ( Anti-incumbency)ஆம் ஆத்மி தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணமாக அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகிறது.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது காங்கிரஸ் கட்சியால் பிரிந்த வாக்குகள். இந்த தேர்தலில், தொடர்ந்து 3 வது முறையாக ஒரு இடத்தைக் கூட கைப்பற்றாமல் காங்கிரஸ் தோல்வி தழுவியுள்ள போதிலும், பாஜக-வுக்கு எதிரான வாக்குகளை அக்கட்சி பிரித்துவிட்டதும் ஆம் ஆத்மி தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அந்த வகையில் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியதும் பாஜக வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது எனலாம்.