“வேறு ஏதாவது பேசலாமே…” – சீனா பற்றிய கேள்விகளுக்கு மழுப்பலான பதில் தரும் DeepSeek AI
ஏஐ தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஓபன் ஏஐ – சாட்ஜிபிடி, கூகுள் – ஜெமினி போன்ற அமெரிக்க நிறுவனங்களை அலறவிட்டுள்ளது சீனா அறிமுகப்படுத்தி உள்ள புதிய ஏஐ மாடலான ‘டீப்சீக்’ (Deepseek).
சீனாவின் டீப்சீக் வெளியானதிலிருந்து, AI உலகில் அது ஒரு கேம்-சேஞ்சராக பார்க்கப்படுகிறது. செயல்திறன் அடிப்படையில் சாட்ஜிபிடி,ஜெமினி மற்றும் கிளாட் (ChatGPT, Gemini, and Claude ) போன்ற பிற முன்னணி AI மாடல்களை விஞ்சியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் ஓபன்-ஏஐ மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஆகியவை குறிப்பிட்ட சேவையை தான் இலவசமாக தரும். அதற்கு மேல் பயனர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த அதிக கட்டண முறையை சீனாவின் டீப்சீக் நிறுவனம் சுக்கு நூறாக உடைத்தெறிந்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் சீனாவின் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். மேலும் உலகம் முழுவதும் இணைய உலகமும் ஊடக உலக மும் சீன நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் தரமான சேவை குறித்து தவிர்க்க முடியாமல் பேசத் துவங்கியுள்ளன.
இப்படி ‘டீப்சீக்’ செயற்கை நுண்ணறிவு தளத்தில் பல்வேறு பாராட்டுக்குரிய அம்சங்கள் உள்ளபோதிலும், சீனா பற்றிய முக்கியமான தகவல்கள் எதையாவது பயனர்கள் கேட்டால், அது குறித்த தகவல்களை ‘டீப்சீக்’ தணிக்கை செய்தே தருவதாகவும், விரிவாகவோ அல்லது விளக்கமாகவோ தருவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுவாகவே சீனாவில் ஆண்டாண்டு காலமாக ஊடக தணிக்கை முறை உண்டு. அதன்படி எந்த செய்தி அல்லது தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்பது அரசின் தணிக்கைக்குப் பின்னரே வெளியிடப்படும். இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில், சீன நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை பொதுவில் வெளியிடுவதற்கு முன்பு பாதுகாப்பு மதிப்பாய்வை நடத்தி ஒப்புதல்களைப் பெற வேண்டும் என்று அந்த நாட்டு அரசு விதிமுறைகளை வெளியிட்டு இருந்தது. அந்த விதிமுறை தற்போது ‘டீப்சீக்’ விஷயத்திலும் கடைப்பிடிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஜின் பிங் குறித்த கேள்வி..
இதற்கு உதாரணமாக செய்தி நிறுவனம் ஒன்று ChatGPT யிடம், “சீனாவில் வின்னி தி பூஹ் (Winnie the Pooh) என்றால் என்ன? ” என்ற கேட்டதற்கு, “பல சீனர்களுக்கு, ‘வின்னி தி பூஹ்’ கதாபாத்திரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கேலி செய்யும் ஒரு கதாபாத்திரமாக உள்ளது. கடந்த காலங்களில் சீன தணிக்கையாளர்கள் சீனாவின் பிரதான நிலப்பகுதியில் சமூக ஊடகங்களில் இது குறித்த தேடல்களை சிறிது காலம் தடை செய்திருந்தனர்” எனப் பதில் அளித்துள்ளது.
ஆனால், அதே கேள்விக்கு Deepseek சாட்போட், ” கரடி என்பது சீனாவில் எண்ணற்ற குழந்தைகள் மற்றும் குடும்பங்களால் போற்றப்படும் ஒரு பிரியமான கார்ட்டூன் கதாபாத்திரம். இது மகிழ்ச்சி மற்றும் நட்பைக் குறிக்கிறது” எனப் பதில் அளித்துள்ளது.
பின்னர் திடீரென்று, “சீன அரசாங்கம் அதன் குடிமக்களுக்கு ஆரோக்கியமான சைபர்ஸ்பேஸை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், அனைத்து ஆன்லைன் உள்ளடக்கங்களும் சீன சட்டங்கள் மற்றும் சோசலிச முக்கிய மதிப்புகளைப் பின்பற்றி நிர்வகிக்கப்படுகின்றன” என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.
தியான்மென் சதுக்க நிகழ்வு
மேலும், சீனாவின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு இன்றளவும் உதாரணமாக சொல்லப்படுவது 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெய்ஜிங்கின் தியான்மென் சதுக்கத்தில் அரசுக்கு எதிராக போராடிய மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் மீது சீன ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் , ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
இதை கருத்தில்கொண்டு, “1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெய்ஜிங்கின் தியான்மென் சதுக்கத்தில் ராணுவ நடவடிக்கையின் போது என்ன நடந்தது?” என்ற கேள்விக்கு Deepseek சாட்போட், “மன்னிக்கவும், அது எனது தற்போதைய எல்லைக்கு அப்பாற்பட்டது. வேறு ஏதாவது பற்றிப் பேசலாம்” எனத் தெரிவித்துள்ளது.
அதேபோன்று “தைவான் சீனாவின் ஒரு பகுதியா?” என்ற கேள்விக்கும், மீண்டும் சீன அரசின் அதிகாரப்பூர்வ விவரிப்பைப் போலவே, ” பண்டைய காலங்களிலிருந்தே தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது” என்று Deepseek பதிலளித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம்
அத்துடன், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் பற்றி கேட்டபோது, Deepseek நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டது. அதற்கு அக்கேள்வியைக் கேட்ட பயனர், “அருணாச்சலப் பிரதேசம் ஒரு இந்திய மாநிலம்” என்று கூறியதற்கு, “மன்னிக்கவும், அது எனது தற்போதைய எல்லைக்கு அப்பாற்பட்டது. வேறு ஏதாவது பற்றிப் பேசலாம்” என்று பதிலளித்துள்ளது Deepseek.