தவிர்க்கப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து வரிகள் … கவர்னர் கண்ணசைவில் நடந்ததா?
சென்னையில் ‘டிடி தமிழ்’ தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று ‘இந்தி மாதம்’ கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்த தகவல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானபோதே, தமிழகத்தில் ‘இந்தி மாதம்’ கொண்டாட்டத்தைத் தவிர்க்க வேண்டும், தொலைக்காட்சி வாயிலாக இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
தவிர்க்கப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து வரிகள்
ஆனாலும் திட்டமிட்டபடி சென்னையில் ‘டிடி தமிழ்’ தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று ‘இந்தி மாதம்’ கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். விழாவின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைக்கப்பட்டது. அப்போது, வாழ்த்திலுள்ள ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திருநாடும்’ எனும் வரிகள் பாடப்படவில்லை. இதில் ‘திராவிடம்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளதால், ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் திட்டமிட்டே அந்த வரிகள் தவிர்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
ஆளுநரின் பேச்சால் அடுத்த சர்ச்சை
ஆளுநர் ரவி ஏற்கெனவே கடந்த காலங்களில் “தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். மேலும்,
“திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்” என்றும் கூறி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், நேற்றைய நிகழ்வில் ஆளுநர் பேசியபோது, இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டதோடு, “இந்தியா எப்போதும் ஒன்றாக இருந்துள்ளது. பிரித்தாளும் கொள்கை இங்கு வெற்றி பெற்றதில்லை. நாட்டின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. இங்கு தமிழ் குறித்துப் பேசுகிறவர்கள், இந்தியாவை விட்டு தமிழைக் கொண்டு செல்வதற்கு என்ன முயற்சிகளை எடுத்தனர்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க தொடர் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்தித் திணிப்பு என்று கூறி தமிழக மக்களை இந்தி கற்கவிடாமல் தடை செய்திருக்கின்றனர். நாட்டில் 23 மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 3-வது மொழி அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு பிரிவினைவாத நோக்கம்” என்றும் ரவி பேசி இருந்தார்.
குவிந்த கண்டனங்கள்
இதற்கு தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒரு மைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்க ளையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமை யால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வு களையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடி யாகத் திரும்ப பெறவேண்டும்!” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி! திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி!திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு! தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்” என காட்டத்துடன் கூறி உள்ளார்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, “ஏற்கனவே, பொதிகை என்னும் பெயரை நீக்கியது, தொலைக்காட்சியின் இலச்சினையை காவி நிறத்துக்கு மாற்றியது என தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மநீம தலைவர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆளுநரின் ஊடக ஆலோசகர் விளக்கம்
இதனிடையே, ஆளுநர் ரவியின் செயலுக்கு எதிர்ப்பு வலுக்கத் தொடங்கிய நிலையில், ஆளுநரின் ஊடக ஆலோசகர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடு’ வார்த்தை நீக்கப்பட்டதில் ஆளுநருக்கு எந்தப் பங்கும் இல்லை. தமிழ் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் மீது ஆளுநர் மிகுந்த மதிப்பு கொண்டவர்” என்று கூறி உள்ளார். ஆளுநரும் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகவும் தெளிவாகவும் நான் பாடுவேன் என்பது அனைவருக்கும் தெரி யும் என்று கூறியுள்ளார்.
மன்னிப்புக் கேட்ட டிடி தமிழ்
“தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது, கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவற விட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள் கிறோம். தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவ மதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. வேண்டுமென்றே இதனை யாரும் செய்ய வில்லை” என்று டிடி தமிழ் தொலைக் காட்சி விளக்கம் அளித்துள்ளது.
இறுக்கமாக மாறிய இணக்கம்
இந்த வார தொடக்கத்தில் சென்னையில் பெய்த கனமழையின்போது தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆளுநர் ரவி பாராட்டு தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக ஆளுநருடன் இணக்கமாக போகும் வகையில் குறிப்பிட்ட நிகழ்வுகள் மற்றும் சுற்றுப்பயணத்தின்போது அவர் ஏதாவது தகவல் கேட்டாலோ அல்லது விளக்கம் கேட்டாலோ அது குறித்த உரிய தகவலை தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனால், இரு தரப்புக்கும் இடையே இணக்கம் நிலவுவதாக கூறப்பட்ட நிலையில், தற்போதைய நிகழ்வு அதில் மீண்டும் இறுக்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவே கருதப்படுகிறது.