புயல், மழை எச்சரிக்கை: 2, 229 நிவாரண முகாம்கள், பேரிடர் மீட்புப் படைகள் தயார்!
வங்கக் கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. ஆனால், திடீர் திருப்பமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், இந்த புயலுக்கு சவுதி அரேபியாவின் பரிந்துரைப்படி ‘ஃபெங்கல்’ என்பதற்கு பதிலாக ‘ஃபெஞ்சல்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் நாளை (30.11.2024 ) பிற்பகல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில், 13 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 260 கி.மீ., புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 270 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது.
டிச.5 ஆம் தேதி வரை மழை
இதனால், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் டிச.5 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரைப் பகுதிகள் மற்றும் பக்கிங்காங் கால்வாய் முகத்துவாரம் புயல் கூடங்களை விழுப்புரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பாளர் சுன் சோங்கம் ஜடக் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி இன்று ஆய்வு செய்தார்.
தயார் நிலையில் 2,229 நிவாரண மையங்கள்
இந்த நிலையில், புயல் எச்சரிக்கை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வந்து, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது, அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தற்போது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று (29.11.2024) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 1 குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா 1 குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
இதுமட்டுமின்றி, இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.