தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றள்ளதன் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம்,கிண்டி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அடையார், மடிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், வாலாஜாபாத், வண்டலூர், சோளிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், ஆலந்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
விமானங்கள் தாமதம்
மழை காரணமாக சென்னைக்கு வரும் விமானங்களும், புறப்படும் விமானங்களும் தாமதமானதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் நோக்கி வரும் ஃபெங்கல் புயல்
இந்த நிலையில், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்படி புயலாக மாறினால் அதற்கு ஃபெங்கல் புயல் என பெயரிடப்படும் என்றும், இந்த புயல், அடுத்த 2 நாட்களில் வடக்கு- வடமேற்கு திசையையில் நகர்ந்து இலங்கையை தொட்டு தமிழக கடற்கரையை நோக்கி நகரும். வருகிற 29 ஆம் தேதி அன்று சென்னை அல்லது நாகப்பட்டினம் – புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும். இதனால், தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், இந்த புயல் காரணமாக அதிக அளவாக 22 செ.மீ வரை கனமழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே போல நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் ராமநாதபுரத்தில் (பகுதி அளவில்) மழை நீடிக்கும். புதுச்சேரி மற்றும் கடலூரிலும் கனமழை பொழியும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்
பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இலங்கைக்கு கீழே உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதன் நகர்வு மிகவும் நிதானமாக இருக்கின்ற காரணத்தாலும், தமிழக கடலோர பகுதியை ஒட்டி இருப்பதாலும் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு மழை இருக்கும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு அருகில் கரையை கடந்தால் இந்தப் பகுதிகளில் கனமழை பதிவாகும். இந்த மழை மூலம் சென்னையின் நீர் ஆதாரங்கள் பெறுகின்ற மழை நீர் 2025-ம் ஆண்டை சமாளிக்க உதவும். நீர்ப்பிடிப்பு பகுதிகளான பூண்டி, செம்பரம்பாக்கம் மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதிகளில் அதிக மழை இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இப்போதைக்கு தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் மழை பொழிவு இருக்காது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பொழியும். காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்த பிறகே உட்புற மாவட்டங்களில் மழை இருக்கக்கூடும். தென் தமிழகத்தில் ராமநாதபுரம் வரை மழை இருக்கக்கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வேகமாக காற்று வீசும் அபாயம் இல்லை. மழை பொழிவு அதிகம் இருக்கும் என்பதே அச்சுறுத்தல். எப்போதும் போல இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையை கடக்காது. இருப்பினும் வடக்கு மற்றும் வடகிழக்கு இலங்கையில் மழை பொழிவு இருக்கும்” என மேலும் தெரிவித்துள்ளார்.