தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது, இன்று இரவு 8.30 மணிக்கு ஃபெங்கல் புயலாக மாறும். அதன் பின்னர் அந்த புயல், நாளை தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல் சென்னையை நெருங்கும்?
இதனிடையே ஃபெங்கல் புயல், சென்னையை நெருங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சென்னை – புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தை நோக்கி, புயல் நகர்வதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யலாம்.
குறிப்பாக,புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மதுரை, சேலம், தேனி, பெரம்பலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து கனமழையினை எதிர்கொள்ள டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலிக் காட்சி வாயிலாக மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி முன்னெச்சரிக்கையாக திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவும், மாநில பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளது. மேலும், மேற்படி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.