தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடித்து வருவதாகவும், இது ஃபெங்கல் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பல மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில், தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது, இன்று 66- 75 கி.மீ. வேக காற்றுடன் சூறாவளி புயலாக மாறி நாளை காலைக்குள் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு முதல் மழை
இதனால், வரும் 30 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இந்த புயல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்பதால் செங்கல்பட்டு, சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளது.
மேலும், வரும் 29,30 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால், தமிழகத்திற்கு நாளை மறுநாள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்படுவதாகவும் அம்மையம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும் என கணித்துள்ளார். வட கடலோர மாவட்டங்களில் இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும். காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்திலும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.