மாநில சுயாட்சி, கூட்டாட்சி: ஜனநாயக சக்திகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறைகூவல்!

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், கூட்டாட்சி என்ற சொல்லே இன்றைக்கு ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு ‘அலர்ஜி’ ஆகிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் கூட்டாட்சி மலர இந்தியா முழுவதும் இருக்கும் ஜனநாயகச் சக்திகள் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
” திராவிட இயக்கத்துக்கும் – பொதுவுடைமை இயக்கத்துக்குமான உறவு என்பது, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தந்தை பெரியார் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதில் இருந்தே தொடங்குகிறது. தன்னை ஒரு கம்யூனிஸ்டாகவே அடையாளப்படுத்திக்கொண்டவர் தலைவர் கலைஞர்! உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் உருவச் சிலை சென்னையில் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு உங்களுள் பாதியாக இந்த மாநாட்டுக்கு வந்திருக்கும் என் பெயர், ஸ்டாலின்!
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியே, “பல்வேறு மாநிலங்களால் ஆன ஒன்றியம்தான் இந்தியா” என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. அதனால்தான், ‘ஒன்றிய அரசு’ என்று சொல்கிறேன். சட்டத்தில் இல்லாததை நான் சொல்லவில்லை. ஆனால், அதையே அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடுதான் அவர்களின் கோபம்!
பாசிச ஆட்சியை நடத்தும் பாஜக
அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை டம்மியாக மாற்றி, ஒற்றையாட்சித் தன்மை கொண்ட பாசிச ஆட்சியை இன்றைய பா.ஜ.க. ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறது! ஒரே நாடு – ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே உணவு – ஒரே தேர்தல் – ஒரே தேர்வு – ஒரே பண்பாடு என்ற ஒற்றைத் தன்மை, ஒரு கட்சியின் ஆட்சியாக முதலில் அமைந்து, ஒரே ஒரு தனிமனிதரின் கையில் அதிகாரத்தை குவிக்கத்தான் அது பயன்படும்.
பிறகு, அந்த தனிமனிதர் வைத்ததுதான் சட்டம்! அவர் சொல்வதுதான் வேதம்! அவரால் அங்கீகரிக்கப்பட்ட சிலருக்கு மட்டும்தான் அதிகாரம்! அவரால் ஆசீர்வதிக்கப்பட்டர்களுத்தான் நிதி மூலதனம் என்று ஆகிவிடும்! பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசிசத்தை நாம் வீழ்த்தியாக வேண்டும்! பா.ஜ.க.வின் பாசிச கோர முகத்தைத் தொடர் பரப்புரையின் மூலமாகத்தான் வீழ்த்த முடியும். எல்லாவற்றிற்கும் மேல் மக்கள் நலன்தான் முக்கியம் என்ற புள்ளியில் நாம் ஒன்றாக இருக்க வேண்டும்.
ஏன் என்றால், ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான், இந்தியாவில் கூட்டாட்சி காப்பாற்றப்படும்! பிரகாஷ் காரத் போன்றவர்கள் அதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்; தொடர்ந்து பாடுபடவேண்டும். உங்களோடு சேர்ந்து, நாங்களும் பாடுபடக் காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம். ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்குமான உறவுகளை வலிமைப்படுத்த, சர்க்காரியா கமிஷனும், பூஞ்சி கமிஷனும் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று, 2012-இல் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கேட்டார்.

நான் இந்த மேடையில் நின்று பிரதமர் மோடி அவர்களை ஒரு கேள்வி கேட்கிறேன். தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆகியிருக்கும் நீங்கள், அதை நடைமுறைப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? சொல்ல வேண்டும். இன்னும் 2 நாட்களில் தமிழ்நாட்டிற்கு வரப் போகிறீர்கள். நேற்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு, அவர் வருகிற நேரத்தில் அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
மாநில சுயாட்சி – கூட்டாட்சி – சமூகநீதி – மதநல்லிணக்கம் ஆகியவற்றுக்கு எதிரான – சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்! அதை உருவாக்க, இந்தியா முழுவதும் இருக்கும் ஜனநாயகச் சக்திகளைத் திரட்டுவோம். இதற்காகத்தான் திமுக குரல் கொடுக்கிறது. பொதுவுடமைத் தோழர்களும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். இணைந்து போராடுவோம்! பாசிசத்தை வீழ்த்துவோம்! வீழ்த்துவோம்” என ஸ்டாலின் மேலும் பேசினார்.