சமையல் சிலிண்டர் விலை உயர்வும் பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வு அமலாகாத பின்னணியும்!

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இதில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.
கடந்த 1 ஆம் தேதி வணிக சிலிண்டரின் விலையில் ரூ.41 குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.
சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு
இந்த நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திங்கட்கிழமையன்று திடீரென ரூ.50 உயர்த்தி உள்ளது. இதன் மூலம் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் கலால் வரி ரூ.2 உயர்வு
அதேபோன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மேலும் ரூ.2 உயர்த்தி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.5% சரிந்து ஒரு பீப்பாய் 59.16 டாலருக்கு விற்கப்படுகிறது. பிரென்ட் கச்சா எண்ணெயும் 4.39% விலை குறைந்து 62.7 டாலருக்கு விற்பனையாகிறது.
கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலால் வரி லிட்டருக்கு மேலும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் வரி விதிப்பால், பொதுமக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய பலன் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
உண்மையில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்த திட்டமிட்டு, அதற்கான எதிர்ப்பை சமாளிக்கும் உத்தியாகவே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி விட்டு, அதனை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக்கொண்டு பொதுமக்களுக்கு சுமை இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் உத்தியை மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கடைப்பிடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “2014 முதல் சர்வதேச கச்சா எண்ணெய் விலை 41% குறைந்துள்ளது. ஆனால், மக்களுக்கு அதன் பலனை அளிக்காமல், அரசு வரியை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களையும் மக்களையும் சுரண்டுகிறது” என குற்றம்சாட்டி உள்ளார். “பங்குச் சந்தை சரிவால் ரூ.19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட நிலையிலும், இழந்த பிறகும் உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை போல” என கோபத்துடன் சாடியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, X தளத்தில், “இறுதியாக, மோடி ஜி கட்டணங்களுக்கு பொருத்தமான பதிலடி கொடுத்துவிட்டார்! பெட்ரோல்-டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலைகள் மேலும் உயர்த்தப்பட்டுள்ளன. பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் கொள்ளையடிக்கும் மற்றொரு பரிசு வழங்கப்பட்டது!” எனக் கூறி உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?.உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்” என்பது, Sadist BJP அரசுக்கு மிகவும் பொருந்தும்!
அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. ஒன்றிய BJP அரசே… தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக” என தெரிவித்துள்ளார்.
கலால் வரி உயர்வு அமலாகாத பின்னணி
இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயராது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த சுமை வாடிக்கையாளர்களுக்கு மாற்றப்படவில்லை என்றும், இந்த விலை உயர்வால் மக்களுக்கு எதுவும் பாதிப்பில்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மார்ச் 14-ல், தேர்தலுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. 2022, மே 22 முதல் விலை அப்படியே இருந்த நிலையில், தற்போது எடுக்கப்பட்ட இந்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது போல, கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களுக்கு திணித்து, மக்களுக்கு பாதிப்பு இல்லை எனக் கூறி, சமையல் கேஸ் விலை உயர்வுக்கான எதிர்ப்பை தணிக்க அரசு முயல்கிறது. ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் சூழலில், இந்த உயர்வு நியாயமற்றது” என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த விலை உயர்வு மத்திய அரசின் நிதி வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக இருக்கலாம். ஆனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு கலால் வரி சுமையையும், மக்களுக்கு சமையல் கேஸ் விலை உயர்வையும் திணிப்பதாகவே உள்ளது. ” சர்வதேச சந்தை நிலவரத்தை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணம் அளிக்காமல், அரசு தனது நிதி இலக்குகளை முன்னிறுத்துவது நியாயமல்ல. விலை உயர்வைத் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்” என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.